வாடகை செலுத்த பணமில்லாததால் கள்ள நோட்டு அச்சிட்டவருக்கு `வலை'
வாடகை செலுத்த பணமில்லாததால் கள்ள நோட்டு அச்சிட்டவருக்கு `வலை'
UPDATED : அக் 25, 2026 05:35 PM
ADDED : அக் 25, 2026 05:32 PM
நாக்பூர்: மஹாராஷ்டிராவில் வாடகை வீட்டில் குடியிருக்கும் ஒருவர் வாடகையை செலுத்த முடியாத நிலையில், வீட்டிலேயே, 37 லட்சம் ரூபாய் கள்ள நோட்டுக்களை அச்சடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மஹா.,வில் உள்ள நாக்பூர் திரிமூர்த்தி நகரைச் சேர்ந்தவர் புஷ்பக் கிருஷ்ணா பந்தர்கர், 30. இவர் ரமேஷ் என்பவரது வீட்டில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக வாடகைக்கு குடியிருந்து வருகிறார். கடந்த ஜனவரி முதல் புஷ்பக், வீட்டு வாடகை செலுத்தாததால் ரமேஷ் அவரை சந்தித்து வாடகை பணத்தை கேட்டுள்ளார்.
அப்போது அவரை கத்தியைக் காட்டி புஷ்பக் மிரட்டியுள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக அவர் வீட்டுக்கு வராததால் சந்தேகமடைந்த உரிமையாளர் ரமேஷ், போலீசார் உதவியுடன் வீட்டின் கதவை திறந்து பார்த்தபோது அங்கு, 37 லட்சம் மதிப்புள்ள 500 ரூபாய் கள்ளநோட்டுக்கள் கட்டுக்கட்டாக கிடந்தன.
இது தவிர பாதியளவு அச்சிடப்பட்ட கள்ள ரூபாய் நோட்டுக்கள் சிதறிக்கிடந்தன. இதையடுத்து கள்ள நோட்டு அச்சிட்ட பிரிண்டர், பிரிண்ட் செய்ய தேவையான காகிதங்கள் மற்றும் பாதியளவு அச்சிடப்பட்ட கள்ள நோட்டுகள் உட்பட 48 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
மும்பைக்கு தப்பியோடிய புஷ்பக்கை பிடிக்க போலீஸ் படை அங்கு விரைந்துள்ளது.
