அமித் ஷாவுக்கு எதிராக அவதுாறு கருத்து ராகுலுக்கு ஜாமின் வழங்கியது கோர்ட்
அமித் ஷாவுக்கு எதிராக அவதுாறு கருத்து ராகுலுக்கு ஜாமின் வழங்கியது கோர்ட்
UPDATED : ஆக 07, 2025 11:15 AM
ADDED : ஆக 07, 2025 12:43 AM
சாய்பாசா: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குறித்து அவதுாறாக பேசிய வழக்கில், காங்கிரஸ் எம்.பி., ராகுலுக்கு, ஜார்க்கண்ட் சிறப்பு நீதிமன்றம் நேற்று ஜாமின் வழங்கியது.
கடந்த 2018ல், ஜார்க்கண்டின் சாய்பாசாவில் நடந்த பேரணியில் பங்கேற்ற காங்கிரஸ் எம்.பி., ராகுல், மத்திய அமைச்சர் அமித் ஷாவுக்கு எதிரான கருத்துகளை தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து, அமித் ஷா குறித்து அவதுாறாக பேசியதாக ராகுல் மீது, ராஞ்சி நீதிமன்றத்தில் பிரதாப் குமார் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
அதில், 'அமித் ஷா குறித்து ராகுல் தெரிவித்த கருத்து அவதுாறானது. அவை, அமித் ஷாவின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் உள்ளது' என, தெரிவித்துஇருந்தார். இந்த வழக்கு விசாரணை, ஜார்க்கண்டின் சாய்பாசாவில் உள்ள எம்.பி., - எம்.எல்.ஏ.,க் களுக்கான சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப் பட்டது.
அவதுாறாக பேசியது தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு, லோக்சபா எதிர்க்கட்சி தலைவரும், எம்.பி.,யுமான ராகுலுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதையடுத்து, சாய்பாசா சிறப்பு நீதிமன்றத்தில் ராகுல் நேற்று காலை 10:55 மணிக்கு ஆஜரானார். அவரிடம், வழக்கு விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு நீதிபதி வலியுறுத்தினார்.
இதை ராகுல் ஏற்றுக்கொண்டார். இதைத்தொடர்ந்து, ராகுலுக்கு நிபந்தனைகளுடன் கூடிய ஜாமின் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.