ADDED : டிச 13, 2024 11:08 PM

இன்றைய நாட்களில் அஜீரண பிரச்னை என்பது, பலரை வாட்டி வதைக்கிறது. இதற்கு பல காரணங்கள் இருக்கலாம். இதை அலட்சியப்படுத்தினால், வேறு பிரச்னைகளை உருவாக்கலாம். அஜீரண பிரச்னைக்கு இயற்கையான முறையில் தீர்வு கண்டுகொள்வது நல்லது. சில இலைகளால் இப்பிரச்னைக்கு எளிதில் தீர்வு காணலாம்.
இந்த இலை உடல் ஆரோக்கியத்துக்கு, மிகவும் நல்லது. அது எந்த இலை, எங்கு கிடைக்கும் என்ற கேள்விகள் உங்களுக்குள் எழும். அதை நீங்கள் எங்கும் தேடி அலைய வேண்டாம். உங்கள் வீட்டு சமையல் அறையிலேயே இருக்கும். அன்றாடம் சமையலுக்கு பயன்படுத்தப்படும் கறிவேப்பிலைதான் அந்த இலை.
பொதுவாக வேப்பிலையில் மருத்துவ குணங்கள் அதிகம் என கூறுவதுண்டு. ஆனால் கறிவேப்பிலையிலும், மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. இதையறியாத பலரும், உணவில் இருந்து துாக்கி வீசுகின்றனர். உணவு தாளிக்கும்போது மட்டும், இதை பயன்படுத்துகின்றனர்; சாப்பிடும்போது ஒதுக்கிவைத்து விடுகின்றனர்.
கறிவேப்பிலை, அஜீரணம் உட்பட பல பிரச்னைகளை குணப்படுத்தும். இதில் மருத்துவ குணங்கள் ஏராளம். நான்கைந்து கறிவேப்பிலையை பச்சையாக தின்றால், வயிற்றில் உள்ள புண்களை அகற்றும். வயிற்று உப்புசத்தை குறைக்கும். நெஞ்சு எரிச்சலை கட்டுப்படுத்தும்.
உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்து, உணவை செரிமானம் ஆக்கும். தேவையற்ற பாக்டீரியாக்களை அழிக்கும். கர்ப்பிணியருக்கு ஏற்படும் வாந்தி பிரச்னைக்கும் கறிவேப்பிலை நல்ல தீர்வு கிடைக்கும். பசியை துாண்டும். வாயு பிரச்னை நீங்கும்.
இவ்வளவு மருத்துவ குணங்கள் நிறைந்த கறிவேப்பிலையை, உணவில் இருந்து துாக்கி எறியாதீர்கள்; சாப்பிடுங்கள். ஆரோக்கியத்தை காப்பாற்றிக் கொள்ளுங்கள்.
கறிவேப்பிலையில் சட்னி மற்றும் கஷாயம் செய்தும் ருசிக்கலாம். குறிப்பாக கறிவேப்பிலை கஷாயம், நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. இரண்டு டம்ளர் தண்ணீரை அடுப்பில் வைத்து, ஒரு கைப்பிடி அளவு கறிவேப்பிலை, சிறிதளவு கடுக்காய், சுக்கு சேர்த்து ஒரு டம்ளராகும் வரை கொதிக்க விடவும். நன்றாக கொதித்த பின், வடிகட்டி இளஞ்சூடாக குடிக்க வேண்டும். கசப்பும் காரமும் மிக்க அருமையான கஷாயம்.
இது ரத்தத்தில் நீரிழிவு அளவை கட்டுப்படுத்தும். உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை கரைத்து, உடல் எடையை குறைக்க உதவும். அஜீர்ணம் காணாமல் போகும்.
கொத்துமல்லி, புதினா சட்னி தயாரிக்கும் போது, ஒரு கைப்பிடி கறிவேப்பிலையை சேர்த்து கொள்ளலாம். சட்னியில் சுவை அதிகரிப்பதுடன், உடல் ஆரோக்கியத்துக்கும் நல்லது
- நமநு நிருபர் -.