சொத்துக்காக வீட்டு எஜமானரை 5 ஆண்டுகளாக பட்டினி போட்டு கொன்ற வேலைக்கார தம்பதி எலும்பும் தோலுமாக மீட்கப்பட்ட மகள்
சொத்துக்காக வீட்டு எஜமானரை 5 ஆண்டுகளாக பட்டினி போட்டு கொன்ற வேலைக்கார தம்பதி எலும்பும் தோலுமாக மீட்கப்பட்ட மகள்
ADDED : டிச 31, 2025 04:53 AM
லக்னோ: உத்தர பிரதேசத்தில் வீட்டு வேலைக்காக வந்த தம்பதி, மனநலம் பாதித்த மகளுடன் தனியே வசித்து வந்த ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியரை, சொத்துக்கு ஆசைப்பட்டு ஐந்து ஆண்டுகளாக சரிவர உணவு வழங்காமல் பட்டினி போட்டதில் அவர் உயிரிழந்தார். அவருடைய மகள் எலும்பும் தோலுமாக மீட்கப்பட்டார்.
மனநலம் பாதிப்பு உத்தர பிரதேச மாநிலம், மஹோபா மாவட்டம் ஹிந்த் டயர் கலி பகுதியைச் சேர்ந்தவர் ஓம்பிரகாஷ் சிங் ரத்தோர், 70. ரயில்வேயில் சீனியர் கிளார்க்காக பணியாற்றி 2015ல் ஓய்வு பெற்றார். அவருடன் மனநலம் பாதிக்கப்பட்ட மகள் ரஷ்மி, 27, வசித்து வருகிறார்.
கடந்த 2016ல் ஓம்பிரகாஷின் மனைவி காலமானார். அதன் பின் மகளை கவனிக்கவும், சமையல் வேலைக்காகவும் ராம்பிரகாஷ் குஷ்வாஹா - ராம்தேவி தம்பதியை பணிக்கு அமர்த்தினார் ஓம்பிரகாஷ்.
இவர்கள் ஓம்பிரகாஷ் வீட்டு மாடியில் தங்கி வேலை பார்த்தனர்.
ஓம்பிரகாஷுக்கு லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் மற்றும் வங்கி சேமிப்பு இருப்பதை வீட்டு வேலைக்கு வந்த தம்பதியினர் அறிந்தனர். அதன்பின், ஓம்பிரகாசை உறவினர்களிடம் இருந்து தனிமைப்படுத்தினர்.
இருட்டு அறை இந்நிலையில், நேற்று முன்தினம் ஓம்பிரகாஷ் உயிரிழந்ததாக உறவினர்களுக்கு தெரிவித்தனர். அவர்கள் வந்து பார்த்த போது, உடல் மெலிந்து அடையாளம் தெரியாத நிலையில் ஓம்பிரகாஷின் உடல் காணப்பட்டுஉள்ளது.
அவரின் மகள் வீட்டில் உள்ள இருட்டு அறையில் நிர்வாண நிலையில் எலும்பும் தோலுமாக இருந்துள்ளார்.
இதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து ஓம்பிரகாஷின் தம்பி கூறியதாவது:
மனைவி இறந்த பின் என் அண்ணன் தனி வீட்டுக்கு மாறினார். அவ்வப்போது அவரை சந்தித்து வந்தேன்.
சில ஆண்டுகளாக எங்களுக்கிடையேயான தொடர்பு நின்று போனது.
நான் ஒருமுறை சந்திக்க வந்த போது 'பார்க்க விரும்பவில்லை' என வேலையாளை விட்டு சொன்னார்.
ஆனால், அவரது தற்போதைய நிலையை பார்க்கும் போது தான் தெரிகிறது.
இவர்களே திட்டம் போட்டு அவரை தனிமைப்படுத்தி உள்ளனர்.
ஒருவேளை உணவு சரியாக கொடுத்திருந்தாலே இந்த நிலை வந்திருக்காது.
அவரது 27 வயது மகள் 80 வயது தோற்றத்தில் உள்ளார். அவர் உடலில் தசையே இல்லை. உயிர் மட்டுமே ஊசலாடிக் கொண்டிருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

