டில்லி பூங்காவில் 17 வயது சிறுமி பலாத்காரம் 500 பக்கங்களில் தயாராகிறது குற்றப்பத்திரிகை
டில்லி பூங்காவில் 17 வயது சிறுமி பலாத்காரம் 500 பக்கங்களில் தயாராகிறது குற்றப்பத்திரிகை
ADDED : நவ 07, 2026 01:41 PM
புதுடில்லி: டில்லி, கல்காஜியில் உள்ள ஆஸ்தா குஞ்ச் பூங்காவில், 17 வயது சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில், அடுத்த வாரம் டில்லி போலீசார் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய உள்ளனர். 500க்கும் அதிகமான பக்கங்களில் குற்றப்பத்திரிகை தயாராகி வருவதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
தென்கிழக்கு டில்லியின், கல்காஜியில் பகுதியில், 17 வயது சிறுமி ஒருவர், தன் பிறந்த நாளை முன்னிட்டு, செப்., 22ல் கோவிலுக்கு சென்றார். அவருடன், ஆண் நண்பரும் சென்றிருந்தார். பின், இருவரும், அருகில் உள்ள ஆஸ்தா குஞ்ச் பூங்காவிற்கு சென்றனர். அங்கு வந்த மூன்று பேர், கத்தியை காட்டி மிரட்டி, அந்த சிறுமியை பூங்காவின் தனிமையான இடத்திற்கு வலுக்கட்டாயமாக அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்தனர்.
இதுகுறித்து போலீசில் அந்த சிறுமி புகார் அளித்தார். இதனால், டில்லி முழுவதும் பெண்களுக்கான பாதுகாப்பு தொடர்பாக கடும் விவாதங்கள் எழுந்தன. பெண்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், டில்லி பா.ஜ., அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இவ்வழக்கு தொடர்பாக, குற்றம் நடந்த இடங்களை கண்டறியவும், தடயவியல் குழுவினருக்கும், பாதிக்கப்பட்ட சிறுமி முழு ஒத்துழைப்பு அளித்தார்.
பலாத்காரத்தில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்ட ஆசிப், ஹேமந்த் மற்றும் மகேஷ் ஆகிய மூன்று வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
இதற்கு ஆதாரமாக, ‘சிசிடிவி’யில் பதிவான காட்சிகள் சிக்கியுள்ளன.
குற்றம்சாட்டப்பட்ட மூன்று பேரில் ஒருவர் மோட்டார் சைக்கிளில் பூங்காவிற்கு வந்துள்ளார். மற்ற இருவரும் உடன் இருந்துள்ளனர். பின்னர் அவர்களின் செயல்பாடுகள், பலாத்காரம் முடிந்ததும் திரும்பி செல்தல் உள்ளிட்ட அனைத்தும், ‘சிசிடிவி’யில் பதிவாகி உள்ளது.குற்றம்சாட்டப்பட்டவர்களை அடையாளம் காண அணிவகுப்பு நடத்தப்பட்டது. அதில், மூவரையும், பாதிக்கப்பட்ட சிறுமி அடையாளம் காட்டினார்.
இவ்வழக்கில், அடுத்த வாரம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய போலீசார் தயாராகி வருகின்றனர். இந்த வழக்கில், 500 பக்கத்திற்கும் அதிகமாக குற்றப்பத்திரிகை தயாராகி வருகிறது.
முதன்மை பகுதியில், 75 பக்கங்களில், பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் அவருடன் இருந்த ஆண் நண்பர் உட்பட 60 சாட்சிகளின் வாக்குமூலங்களும், தடயவியல் பரிசோதனை அறிக்கை உள்ளிட்ட சுமார் 50 ஆவணங்களும் இடம்பெற்றுள்ளன. இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
இந்த வழக்கில், டில்லி காவல்துறை தலைமையகத்தில் உள்ள உயர் அதிகாரிகள் சிறப்பு கவனம் செலுத்தி, தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்.
குற்றப்பத்திரிகை முழுமையானதாகவும், எல்லா ஆதாரங்களும் வலுவாக எடுத்து வைக்கும் வகையில் ஆவணப்படுத்தப்பட்டிருப்பதாகவும் அமையும். இதன் மூலம் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக, வலுவான ஆதாரங்கள் முன்வைக்கப்படும். விரைவாக தீர்ப்பைப் பெறுவதற்கு ஏற்றபடி, நீதிமன்ற விசாரணையும் திறம்பட நடைபெறுவதை உறுதி செய்ய, போலீசார் தயாராகி வருகின்றனர்.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது கூட்டு பாலியல் பலாத்காரம், குற்றச் சதி, காயப்படுத்துதல் மற்றும் மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், குழந்தைகளை பாலியல் குற்றங்களிலிருந்து பாதுகாக்கும், போக்சோ சட்டத்தின் 6வது பிரிவின் கீழ், தீவிரமான பாலியல் வன்கொடுமை மற்றும் குற்றத்திற்கு உடந்தையாக இருத்தல் ஆகியவற்றின் கீழும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இவ்வாறு போலீசார் கூறினர். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
