ADDED : ஜூன் 06, 2026 10:05 PM

தி.மு.க., உடனான உறவை, காங்கிரஸ் முறித்துக்கொண்டு, த.வெ.க.,வுடன் கை கோர்த்து, அமைச்சர் பதவிகளையும் பெற்றுக்கொண்டது. இதையடுத்து, 'லோக்சபாவில், காங்கிரஸ் எம்.பி.,க்களுடன் அமர விருப்பமில்லை; தனியாக, 'சீட்' ஒதுக்க வேண்டும்' என்று, சபாநாயகர் ஓம் பிர்லாவிற்கு கடிதம் எழுதினார், பார்லிமென்ட் தி.மு.க., தலைவர் கனிமொழி. இதையடுத்து, அவர்களுக்கு தனி சீட் ஒதுக்க ஒப்புக்கொண்டார் சபாநாயகர்.
லோக்சபாவில், 'இண்டி' கூட்டணிக்கென்று முதல் வரிசையில் ஐந்து சீட்கள் ஒதுக்கப்பட்டு உள்ளன. இதில் காங்கிரசின் கே.சி. வேணுகோபால், அடுத்து ராகுல், டி.ஆர்.பாலு, கனிமொழி, சமாஜ்வாதியின் அகிலேஷ் யாதவ் ஆகியோர் இந்த சீட்களில் அமர்ந்து வந்தனர்.
இதுவரை, இரண்டு முதல் வரிசை சீட்களில் அமர்ந்த தி.மு.க.,விற்கு, இனி ஒரு சீட் தான் ஒதுக்கப்படும். அதில் யார் அமர்வர்? டி.ஆர். பாலுவா அல்லது கனிமொழியா? அத்துடன் ராகுல் பக்கத்தில் தி.மு.க., - எம்.பி., உட்கார மாட்டார்.
இதுவரை பார்லி.,யில் காங்கிரஸ் எடுக்கும் முடிவுகளுக்கு ஆதரவு அளித்து வந்த தி.மு.க., இனி அதைச் செய்யாது. பா.ஜ., கொண்டு வரும் மசோதாக்களுக்கே, தி.மு.க., ஆதரவு அளிக்கும் என, அதன் தலைவர்களிடம் கனிமொழி சொல்லிவிட்டதாக, டில்லியில் செய்திகள் அடிபடுகின்றன. தன் முதுகில் குத்திய காங்கிரசுக்கு பாடம் கற்பிப்பதுடன், த.வெ.க.,விற்கும் குடைச்சல் கொடுக்க, பா.ஜ.,வை மறைமுகமாக ஆதரிக்க, தி.மு.க., முடிவெடுத்து உள்ளதாக டில்லியில் பேசப்படுகிறது.
ராகுலின் அதிரடி!
அடுத்த ஆண்டு பல மாநிலங்களில் சட்டசபை தேர்தல்கள் நடைபெற உள்ளன. இந்நிலையில், கட்சியை பலப்படுத்தவும், தேர்தலில் வெற்றி பெறவும், பல அதிரடி முடிகளை எடுக்கவிருக்கிறார் ராகுல். மேலும், பல மாநில காங்., தலைவர்களை மாற்றவும், முடிவெடுத்து உள்ளாராம். இது தொடர்பாக, சமீபத்தில் காங்., தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, செயலர் வேணுகோபால் மற்றும் ராகுல் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளனர்.
அடுத்தாண்டு பிப்ரவரி மற்றும் -மார்ச்சில் உ.பி., பஞ்சாப், உத்தரகண்ட், மணிப்பூர், கோவா என ஏழு மாநிலங்களிலும், ஆண்டு இறுதியில் ஹிமாச்சல பிரதேசம் மற்றும் குஜராத்திலும் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது.
இதில் பஞ்சாபை தவிர்த்து, மற்ற மாநிலங்களில் காங்கிரசுக்கும், பா.ஜ.,விற்கும் நேரடி போட்டி.
இந்த ஒன்பது மாநிலங்களிலும், பல அதிரடி மாற்றங்கள் கட்சியில் நடைபெற உள்ளதாம். கட்சியின் மாநில தலைவர்கள் மாற்றப்படலாம். இதைத் தவிர, ஹரியானா, தமிழகம், மஹாராஷ்டிரா மற்றும் அசாம் மாநிலங்களில், கட்சிக்கு புதிய தலைவர்கள் நியமிக்கப்பட உள்ளனர். சமீபத்தில் வெற்றி பெற்று, ஆட்சியைப் பிடித்த கேரளத்திலும், காங்கிரசுக்கு புதிய தலைவர் அறிவிக்கப்படுவார்.
ராஜஸ்தானில் சட்டசபை தேர்தல் 2028ல் நடக்கும். இங்கு சச்சின் பைலட் மாநில காங்., தலைவராக நியமிக்கப்படலாம் என்கின்றனர். இப்படி பெரிய அளவில், காங்கிரசில் மாற்றங்களைக் கொண்டு வர தயாராகி வருகிறார் ராகுல்.
தொடர்புக்கு: ndussh@dinamalar.in
