UPDATED : நவ 07, 2026 03:06 PM
ADDED : நவ 07, 2026 03:04 PM

உ.பி., யில் பா.ஜ.,விற்கு நெருக்கடி!
அடுத்த ஐந்து மாதங்களில், உத்தர பிரதேச சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. இங்கு, பா.ஜ., தன் ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ளுமா என்பது சந்தேகத்துக்கிடமாக உள்ளதென, டில்லி அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. ‘சமாஜ்வாதி கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ் சமீபகாலமாக மக்களிடையே மீண்டும் பிரபலமாகி வருகிறார்; இவரால் பா.ஜ.,விற்கு தேர்தலில் பெரும் பிரச்னை வரும்’ என்ற பேச்சும் நிலவுகிறது.
இது குறித்து பா.ஜ., சீனியர்கள் வாய் திறக்க மறுக்கின்றனர். உ.பி., தேர்தலுக்கு சென்ற இரு முறையும் வியூகம் வகுத்து பா.ஜ.,வை வெற்றி பெற வைத்தவர் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா. இவர், தேர்தலுக்கு கடைசி ஒரு வாரத்தில் அதிரடி பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளாராம். பிரதமர் மோடியோ உ.பி.,யில், பா.ஜ., சார்பில் 22 பொதுக்கூட்டங்கள் நடத்தப்போகிறாராம்.
இதனால் அங்கு மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் நம்பிக்கையில் அக்கட்சி உள்ளது. இதற்கிடையே, பா.ஜ.,வின் கூட்டணிக் கட்சிகள் சென்ற தேர்தலை விட இந்த முறை அதிக தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என பிடிவாதமாக உள்ளன. இன்னொரு பக்கம் மத்திய அமைச்சரும், லோக் ஜனசக்தி கட்சி தலைவருமான சிராக் பாஸ்வான் தனக்கும் கூட்டணியில் இடம் வேண்டும் என கேட்கிறார்.
இவருடைய கட்சி இருப்பது பீஹாரில்தான். இருப்பினும் இந்த முறை உ.பி.,யில் இவர் போட்டியிட விரும்புகிறார். கூட்டணியில் இடம் கிடைக்காவிட்டால் 403 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவோம் என அறிவித்துள்ளார். இந்த தேர்தலில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி தனித்து போட்டியிடப் போகிறது. இது பா.ஜ.,விற்கு சாதகமாகவே இருக்கும் என கூறப்படுகிறது.
தொகுதி பங்கீட்டில் அகிலேஷ் யாதவிற்கு காங்கிரசால் பிரச்னை. ஆனால், ‘அக்கட்சியால் எங்களுக்கு எந்த லாபமும் இல்லை.. காங்கிரஸ் எங்களுக்கு ஒரு சுமைதான்’ என்கிறாராம் அகிலேஷ். இப்படி அனைத்து கட்சிகளும் பரபரப்பாக உ.பி., தேர்தல் களத்தில் பரபரப்பாக இருக்க காங்கிரஸ் இருக்கும் இடமே தெரியவில்லை.
ராகுலுக்கு என்ன ஆச்சு?
காங்கிரசை சேர்ந்த லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுலின் சமீபத்திய நடவடிக்கைகள், அக்கட்சியின் சீனியர் தலைவர்களை வருத்தப்பட வைத்துள்ளது. பிரதமர் மோடிக்கு எதிராக அடிக்கடி ஏதாவது புதிதாக, நவீன முறையில் போராட்டத்தை நடத்த வேண்டும் என்பது ராகுலின் விருப்பம். அதன்படி ராமர் கோவில் திருட்டு விவகாரத்தில் பார்லி., வாசலில் ஒரு உண்டியலை வைத்து போராட்டம் நடத்தினார்.
ராகுலும், அவருக்கு நெருக்கமான காங்., – எம்.பி., பவன் கேராவும் கையில் ஒரு பொம்மை குரங்கை வைத்துக் கொண்டு இதுதான் மோடி என கிண்டலாக தர்ணா நடத்தினர். பின், திடீரென மோடி வீட்டு முன் போராட்டம்… தேர்தல் கமிஷன் முன் அதிரடி தர்ணா… உச்ச நீதிமன்றத்திலும் அதிரடியாக புகுந்து போராட்டம்… கடைசியாக மாதிரி பார்லிமெண்ட் நடத்தி தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமாரை நீக்கினார் ராகுல்.
இதற்கெல்லாம் மேலாக, ராகுலுக்கு நெருக்கமானவர்கள் ஒரு அதிரடி திட்டத்தை அவரிடம் சொன்னார்கள். ‘ஒரு சவப்பெட்டி தயார் செய்து அதில் பா.ஜ., என எழுதுவோம். அந்த பெட்டியை டில்லியின் பிரதான தகன இடமான யமுனை நதிக் கரையில் உள்ள நிகம்போக் காட் என்ற இடத்தில் எரித்துவிடுவோம். அத்துடன் அக்கட்சியின் கதை முடிந்துவிடும்’ என, தெரிவிக்க படு குஷியான ராகுல் உடனே இதை செய்வோம் என்றாராம்.
ஆனால் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே உட்பட பல சீனியர் தலைவர்கள் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனராம். ‘இது கேவலமான விஷயம்; இப்படி செய்தால் நமக்கு பெரும் பிரச்னை வரும். இதை பா.ஜ., தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ளும்’ என, தலைவர்கள் சொல்ல, வேறு வழியில்லாமல் வெறுப்போடு தகன திட்டத்தை கைவிட்டாராம் ராகுல்.
‘உ.பி.,யில் கட்சி எங்கே இருக்கிறது என்றே தெரியாத நிலையில் அதை வளர்ப்பதை விட்டுவிட்டு இப்படி பைத்தியக்காரத்தனமான வேலைகளில் ராகுல் ஈடுபட்டுள்ளாரே. இவருக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லையே’ என காங்கிரசின் சீனியர் தலைவர்கள் நொந்து போயுள்ளனராம்.
வாரணாசியை கலக்கும் தமிழர்!
உ.பி.,யின் வாரணாசியில் ரயில்வே நிலையத்திலிருந்து, காசி விஸ்வநாதர் கோவிலுக்கு செல்ல வேண்டும் என்றால், டிராபிக் நெருக்கடிகளை சமாளித்து ஒரு மணி நேரம் பயணம் செய்ய வேண்டும். ஆனால் இந்த வருட கடைசியில் இந்த நிலை மாறி, 16 நிமிடங்களிலேயே எந்தவித போக்குவரத்து நெருக்கடியும் இல்லாமல் கோவிலுக்கு சென்றுவிடலாம்.
மொத்தம் 807 கோடி ரூபாயில் நடைபெற்று வரும், ‘காசி ரோப் வே’ திட்டம் தற்போது முடியும் தருவாயில் உள்ளது. காசி கன்டோன்மெண்ட் ரயில் நிலைய வாசலில் இருந்து விஸ்வநாதர் கோவிலுக்கு அருகில் வரை இந்த வான் வழியே செல்லக் கூடிய ரோப்வேயில் செல்லலாம். இன்னும் 10 சதவீத வேலை மட்டுமே மீதம் உள்ள நிலையில், இந்தாண்டு இறுதியில் பிரதமர் மோடி தன் லோக்சபா தொகுதியான காசியில் இதை தொடக்கி வைக்க உள்ளார்.
இந்த ரோப்வேயில் 153 கேபின்கள் இயக்கப்படும். ஒரு கேபினில், 10 பயணியர் வீதம், ஒரு மணி நேரத்திற்கு ஒரு திசையில் 3,000 பேர் பயணிக்கலாம். நாள் ஒன்றுக்கு, 96,000 பேர் இதில் பயணிக்கும் வகையில் இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்கான வேலைகளை கவனித்து வருபவர் கடையநல்லூரைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி எஸ். ராஜலிங்கம்.
திருச்சி என்.ஐ.டி.,யில் பொறியியல் பட்டம் பெற்ற இவர், 2009 உத்திர பிரதேச கேடர் அதிகாரியாவார். தற்போது, வாரணாசியின் டிவிஷன் கமிஷனராக இவர் உள்ளார். முன்னதாக, காசியின் கலெக்டராக இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக சிறப்பாக பணியாற்றிய ராஜலிங்கம், தற்போது காசியின் ஒட்டுமொத்த உள்கட்டமைப்பு மற்றும் வளர்ச்சித் திட்டங்களை முன்னின்று நடத்தி வருகிறார்.
இந்தத் திட்டத்தை சர்வதேச பொறியியல் நிறுவனங்களுடன் இணைந்து மத்திய அரசு வடிவமைத்துள்ளது. ஆனால், வாரணாசியில் இதனை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வரும் முக்கிய அதிகாரி ராஜலிங்கம். ரோப்வே பணிகள் நடக்கும் இடங்களுக்கு நேரில் சென்று அடிக்கடி திடீர் ஆய்வுகளை மேற்கொண்டு, வேலையை துரிதப்படுத்தி வருகிறார்.
நிலம் கையகப்படுத்துதல், மின்சார வாரியம், போக்குவரத்துக் காவல் போன்ற பல்வேறு அரசுத் துறைகளை ஒருங்கிணைக்கும் பணிகளையும் மேற்கொள்கிறார் இவர். அடுத்த மாத இறுதிக்குள் ரோப்வே திட்டத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளார் ராஜலிங்கம்.
கர்நாடகாவில் காங்கிரசுக்கு பெரும் பிரச்னை
கர்நாடகாவில் டி.கே. சிவகுமார் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. சித்தாராமையாவை முதல்வர் பதவியிலிருந்து விலக செய்து. இவரை முதல்வர் ஆக்கியது கட்சி தலைமை. தேர்தலின் போது சித்துவுக்கு இரண்டரை வருடம்; சிவகுமாருக்கு இரண்டரை வருடம் முதல்வர் பதவி என எழுதப்படாத ஒப்பந்தம் வாயிலாக இந்த ஏற்பாடு செய்யப்பட்டது.
சித்தாராமையா மிகுந்த வருத்தத்துடன் தன் பதவியை ராஜினாமா செய்ய, சிவகுமார் முதல்வரானார். கர்நாடகாவில் காங்., ஆட்சி அமைத்தது முதலே கட்சிக்குள் ஏகப்பட்ட பூசல்கள். இப்போது நிலைமை முற்றிவிட்டது.
சித்தாராமையாவிற்கு எதிராக ஒரு வீடியோ சமீபத்தில் வெளியானது. அதில் ஒரு பெண்ணுடன் அவர் பேசுவது போன்ற காட்சி இடம் பெற்றுள்ளது. இதன் பின்னணியில் சிவகுமார் உள்ளார் என சித்து புகார் அளித்துள்ளார். இந்த வீடியோ போலியானது என போலீஸ் தெரிவித்திருந்தாலும், தன் பெயரை கெடுக்கவே சிவகுமார் இதை செய்துள்ளார் என கோபமடைந்துள்ளார் சித்தராமையா.
இது தொடர்பாக, டில்லியில் ராகுலை சந்தித்த அவர், சிவகுமாரை கட்டுப்படுத்தவில்லையென்றால் தன் ஆதரவாளர்களுடன் கட்சியிலிருந்து வெளியேறிவிடுவேன் என எச்சரித்துள்ளாராம். இதற்கிடையே கர்நாடகா எம்.எல்.சி., தேர்தலில் போட்டியிட்ட நான்கு தொகுதிகளிலும் காங்., தோல்வி அடைந்துள்ளது. இந்த இடங்களை பா.ஜ., கூட்டணி கைப்பற்றியுள்ளது. இதனால் கர்நாடக மேல்சபையில் சட்டங்களை நிறைவேற்றுவதில் ஆளும் காங்கிரசுக்கு பிரச்னை வரும்.
சித்து -– சிவகுமார் பிரச்னை, 2028ல் நடக்கவுள்ள சட்டசபை தேர்தலிலும் எதிரொலிக்கும் என சொல்கின்றனர் அக்கட்சியினர். தேர்தல் சமயத்தில் சித்து தனி கட்சி ஆரம்பித்தாலும் ஆச்சர்யப்படுவதிற்கில்லை என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனால், இங்கு காங்., ஆட்சியை தக்க வைத்துக்கொள்ளுமா என்பது சந்தேகம்தான் என அக்கட்சியினர் புலம்பி வருகின்றனர்.
சித்தராமையா ஒரிஜினல் காங்கிரஸ்காரர் கிடையாது. முதலில் தேவகவுடாவின் ஜனதா தளத்தில் இருந்தார். அப்போது துணை முதல்வராகவும் பதவி வகித்தார். 2005ல் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதை அடுத்து, 2006ல் இவர் காங்கிரசில் சேர்ந்தார்.
