உள்நாட்டில் தயாரான ஹைட்ரஜன் படகு; வாரணாசியில் துவங்கியது சேவை
உள்நாட்டில் தயாரான ஹைட்ரஜன் படகு; வாரணாசியில் துவங்கியது சேவை
ADDED : டிச 12, 2025 12:35 AM

வாரணாசி: முதன் முறையாக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஹைட்ரஜன் எரிபொருளை பயன்படுத்தி இயங்கும் படகு சேவையை, மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் சர்பானந்தா சோனோவால் உத்தர பிரதேசத்தில் நேற்று துவக்கி வைத்தார்.
ஹைட்ரஜன் எரிபொருள் பயன்படுத்தி படகுகளை இயக்குவது, நீர்வழி போக்குவரத்தை நவீனமயமாக்கும் மத்திய அரசின் நீண்டகால திட்டத்தின் ஒரு பகுதி. மாசு இல்லாத போக்குவரத்து, பல்வேறு ஊர்களுக்கு மேம்பட்ட இணைப்பு ஆகியவை, இந்த திட்டத்தின் அடிப்படை நோக்கமாக உள்ளது.
இந்நிலையில், உ.பி.,யின் வாரணாசி கங்கை நதியில் உள்ள நமோ கரையில், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஹைட்ரஜன் எரிபொருளை பயன்படுத்தி இயங்கும் படகை, மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் சர்பானந்தா சோனோவால் நேற்று துவக்கி வைத்தார். கொச்சின் கப்பல் கட்டும் நிறுவனத்தால் இந்த படகு உருவாக்கப்பட்டுள்ளது.
இதில், டீசலுக்கு பதில் ஹைட்ரஜன் எரிபொருள் பயன்படுத்துவதால் நீராவி மட்டுமே உமிழ்வாக வெளியேறும். இதனால் சுற்றுச்சூழலுக்கு எந்த மாசும் ஏற்படாது. மேலும் சத்தம் ஏதுமின்றி அமைதியாக இந்த படகுகள் இயங்கும்.
ஹைட்ரஜன் படகை துவக்கி வைத்து அமைச்சர் சர்பானந்தா சோனோவால் பேசியதாவது:
ஹைட்ரஜன் கப்பல் இயக்கும் நாடுகளின் பட்டியலில் சீனா, நார்வே, நெதர்லாந்து, ஜப்பான் போன்ற நாடுகளுடன் தற்போது நாமும் இணைந்துள்ளோம்.
கடந்த 10 ஆண்டுகளில், ஐந்திலிருந்து 111 ஆக தேசிய நீர்வழிகள் உயர்ந்துள்ளன. உள்நாட்டு நீர்வழி சரக்கு போக்குவரத்து 8 கோடி டன்னில் இருந்து 14.5 கோடி டன்னாக அதிகரித்துள்ளது. 13 நீர்வழிகளில் சுற்றுலா செயல்படுகிறது.
தேசிய நெடுஞ்சாலை போன்று, 'தேசிய நீர்வழி - 1' என்ற முக்கிய உட்கட்டமைப்பு திட்டம் மத்திய அரசால் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டம் மேற்கு வங்கத்தின் ஹால்டியாவையும், உ.பி.,யின் வாரணாசியையும் நீர் மார்க்கமாக இணைக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

