UPDATED : நவ 08, 2026 06:33 PM
ADDED : நவ 08, 2026 06:28 PM
புதுடில்லி: கடந்த 2025 – 26 நிதியாண்டில், காங்கிரஸ் கட்சிக்கு 20,000 ரூபாய்க்கு மேற்பட்ட நன்கொடைகள், 75 சதவீதம் சரிந்து, 130.69 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. தேர்தல் கமிஷனிடம் அக்கட்சி சமர்ப்பித்த அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி, கடந்த 10 ஆண்டுகளில், நன்கொடை விவகாரத்தில் காங்கிரஸ் சந்தித்த கடுமையான வீழ்ச்சி இதுவாகும்.
தேர்தல் செலவுகளுக்காக, ஒவ்வொரு கட்சிக்கும் தனி நபர்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் தேர்தல் அறக்கட்டளைகள், நன்கொடைகளை வழங்கி வருகின்றன. அவ்வாறு அளிக்கப்படும் நன்கொடைகள் தொடர்பான விபரங்களை சம்பந்தப்பட்ட கட்சிகள், தேர்தல் கமிஷனிடம் சமர்ப்பிக்க வேண்டும். இதன்படி, கடந்த 2025 – 26 நிதியாண்டில், காங்கிரஸ் கட்சிக்கு 20,000 ரூபாய்க்கு மேற்பட்ட நன்கொடைகள், 75 சதவீதம் சரிந்துள்ளது தெரியவந்துள்ளது.
கடந்த 2024 – 25ல், 517.39 கோடி ரூபாயாக இருந்த நன்கொடை, 2025 – 26ல் 130.69 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. அதற்கு முன், 2023 – 24ல், அக்கட்சிக்கு, 281.48 கோடி ரூபாய் கிடைத்திருந்தது.
இக்கட்சியின் நன்கொடை சரிவுக்கு ‘ப்ரூடென்ட் தேர்தல் அறக்கட்டளை’ வழங்கிய நிதி குறைந்ததே முக்கிய காரணமாகும்.
கடந்த 2024 – 25ல், 216.34 கோடி ரூபாயை வழங்கிய இந்த அறக்கட்டளை, 2025 – 26ல் 25 கோடி ரூபாய் மட்டுமே வழங்கியுள்ளது.
தேர்தல் கமிஷனின் தரவுகளின்படி, 2024 – 25ல் பா.ஜ.,வுக்கு, 6,074.02 கோடி ரூபாய் நன்கொடையாக கிடைத்தது. அக்கட்சியின் 2025 – 26ம் ஆண்டுக்கான நன்கொடை விபரங்கள் பொதுவெளியில் விடப்படவில்லை.
