பா.ஜ.,வுக்கு தீனி கொடுக்காதீர்கள் அமைச்சர்களுக்கு முதல்வர் 'அட்வைஸ்'
பா.ஜ.,வுக்கு தீனி கொடுக்காதீர்கள் அமைச்சர்களுக்கு முதல்வர் 'அட்வைஸ்'
ADDED : பிப் 02, 2024 11:09 PM

பெங்களூரு: ''ஊடகங்கள் முன்பு பேசும் போது, தேவையற்ற கருத்துகளை பேசாதீர்கள். நாம் வாய் தவறி ஏதாவது பேசினாலும், அதை பா.ஜ., பெரிதாக்கி வருகிறது. நாம் பேசும் வார்த்தைகள், பா.ஜ.,வுக்கு தீனியாக இருக்க கூடாது,'' என முதல்வர் சித்தராமையா கூறினார்.
வரும் லோக்சபா தேர்தலில், கர்நாடகாவில் உள்ள 28 தொகுதிகளில் 20ல் வெற்றி பெற, காங்கிரஸ் இலக்கு நிர்ணயித்து உள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு, பெங்களூரில் தனியார் ஹோட்டலில், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்களுக்கு, முதல்வர் சித்தராமையா விருந்து வைத்தார். அதன்பின்னர் அவர் தலைமையில் கூட்டம் நடந்தது.
லோக்சபா தேர்தலுக்கு தயாராவது பற்றி, அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்களுடன், சித்தராமையா ஆலோசனை நடத்தினார். அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் கூறிய கருத்துகளை உன்னிப்பாக கேட்டறிந்தார்.
பின்னர் அவர் பேசியதாவது:
நம் அரசின் வாக்குறுதி திட்டங்களுக்கு, மக்கள் மத்தியில் நல்ல பெயர் கிடைத்து உள்ளது.
இந்த வாய்ப்பை தவறவிடாதீர்கள். ஐந்து வாக்குறுதி திட்டங்கள் பற்றி, மக்களிடம் எடுத்து கூறி, ஓட்டு சேகரியுங்கள். ஊடகங்கள் முன்பு பேசும் போது, தேவையற்ற கருத்துகளை பேசாதீர்கள். நாம் வாய் தவறி ஏதாவது பேசினாலும், அதை பா.ஜ., பெரிதாக்கி வருகிறது.
நாம் பேசும் வார்த்தைகள், பா.ஜ.,வுக்கு தீனியாக இருக்க கூடாது. பா.ஜ., ஆட்சியில் நடந்த முறைகேடுகள் குறித்து, புள்ளி, விவரத்துடன் பேசி அவர்களுக்கு பதிலடி கொடுங்கள். மத்திய அரசு வறட்சி நிவாரணம் வழங்காதது குறித்து, மக்களிடம் எடுத்து கூறுங்கள். நாம் பேச ஆரம்பித்தால், பா.ஜ., தலைவர்கள் வாயை அடைக்க வேண்டும்.
எம்.எல்.ஏ.,க்கள் சொல்வதை கேட்டு, அவர்கள் நம்பிக்கைக்கு தகுந்தபடி, அமைச்சர்கள் செயல்பட வேண்டும். அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்றி, மாநிலத்தில் 20 க்கும் மேற்பட்ட இடங்களில், கட்சியை வெற்றி பெற செய்யுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.

