ADDED : மார் 16, 2024 11:38 PM
புதுடில்லி : இரட்டை இலை சின்னம் தொடர்பாக, பன்னீர்செல்வம் தரப்பில் தாக்கல் செய்த வழக்கை டில்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதே நேரத்தில், இது தொடர்பாக புதிதாக மனு கொடுக்கும்படியும், அதை தேர்தல் கமிஷன் பரிசீலிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
முன்னாள் முதல்வர்களான பன்னீர்செல்வம் மற்றும் பழனிசாமி தலைமையில், அ.தி.மு.க., இரண்டு அணிகளாக செயல்பட்டது. இது தொடர்பான வழக்கை விசாரித்த, தேர்தல் கமிஷன், பழனிசாமி தலைமையிலான அணியே, உண்மையான அ.தி.மு.க., என்று அறிவித்தது. மேலும், கட்சியின் இரட்டை இலை சின்னத்தையும் அந்த அணிக்கே ஒதுக்கியது.
இந்த விவகாரம் தொடர்பாக, பன்னீர்செல்வம் தலைமையிலான அணி பல்வேறு வழக்குகளை தொடர்ந்துள்ளது.
இந்நிலையில், கட்சியின் இரட்டை இலை சின்னம் தொடர்பாக, தங்களுடைய முறையீடுகளை தேர்தல் கமிஷன் பரிசீலிக்க உத்தரவிடக் கோரி, டில்லி உயர் நீதிமன்றத்தில், பன்னீர்செல்வம் ஆதரவாளர் புகழேந்தி வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த உயர் நீதிமன்ற அமர்வு நேற்று பிறப்பித்த உத்தரவில் கூறியுள்ளதாவது:
இந்த விவகாரம் தொடர்பான இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. அதே நேரத்தில், மனுதாரர்கள் தங்களுடைய தரப்பு வாதம் தொடர்பாக, தேர்தல் கமிஷனிடம் புதிய மனுவை அளிக்கலாம். அதை சட்டத்துக்கு உட்பட்டு விசாரித்து தேர்தல் கமிஷன் உரிய முடிவை எடுக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

