பரம்பிக்குளம் சரணாலயத்தில் வரையாடுகள் கணக்கெடுப்பு
பரம்பிக்குளம் சரணாலயத்தில் வரையாடுகள் கணக்கெடுப்பு
ADDED : ஏப் 29, 2025 09:11 PM

பாலக்காடு; பரம்பிக்குளம் புலிகள் சரணாலயத்தில் வரையாடுகள் குறித்த கணக்கெடுப்பு நடந்தது.
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டத்தில் உள்ளது பரம்பிக்குளம் புலிகள் சரணாலயம். இங்கு, கேரளா, தமிழகத்தில் உள்ள வரையாடுகளின் தகவல் சேகரிப்பதன் ஒரு பகுதியாக கணக்கெடுப்பு நடந்தது.
சரணாலயத்திற்கு உட்பட்ட நான்கு வனச்சரகங்களை, ஆறு தொகுதிகளாக பிரித்து இந்தக் கணக்கெடுப்பு நடந்தது.
பயிற்சி பெற்றவர்கள் நேரில் சென்றும், கேமராக்கள், தொலைநோக்கி பயன்படுத்தியும் கணக்கெடுப்பில் ஈடுபட்டனர்.
வனத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
2016ம் ஆண்டுக்குப் பின், கேரளாவில் வரையாடுகள் குறித்த தரவு சேகரிப்பு, மாநிலம் முழுவதும் நடத்தப்படுவது இதுவே முதல் முறையாகும். கேரளாவில் உள்ள, 19 வனப் பிரிவுகளில், 89 தொகுதிகளாக பிரிக்கப்பட்ட வனப்பகுதிகளில் கடந்த, 27ம் தேதி துவங்கி மூன்று நாட்கள் கணக்கெடுப்பு நடந்தது.
மாவட்டத்தில் வரையாடுகள் இருக்கும், வனப்பகுதிகளிலும் இந்த கணக்கெடுப்பு நடக்கிறது. வனத்துறை ஊழியர்கள் மற்றும் பயிற்சி பெற்ற தன்னார்வலர்களும் இந்த கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டனர்.
தரவு சேகரிப்புக்காக கேமரா பயன்படுத்தப்பட்டது. இந்தத் தகவல்கள் பகுப்பாய்வுக்காக இரவிகுளம் தேசிய பூங்காவில் உள்ள நிபுணர்களிடம் ஒப்படைக்கப்படும்.
இவ்வாறு, அவர் கூறினார்.

