பி.எப்.ஐ.,யின் ரூ.67 கோடி சொத்துகளை முடக்கியது ஈ.டி.,
பி.எப்.ஐ.,யின் ரூ.67 கோடி சொத்துகளை முடக்கியது ஈ.டி.,
ADDED : நவ 08, 2025 11:54 PM
புதுடில்லி: சட்டவிரோதமாக நிதி திரட்டிய வழக்கில், பி.எப்.ஐ., எனப்படும், 'பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா' அமைப்பின், 67 கோடி ரூபாய் சொத்துக்களை ஈ.டி., எனப்படும் அமலாக்கத்துறை முடக்கி உள்ளது.
உத்தர பிரதேசத்தின் அயோத்தியில், பாபர் மசூதி இடிக்கப்பட்ட பின் ஜமாத் - இ - இஸ்லாமி என்ற அமைப்பு தடை செய்யப்பட்டது. இந்த அமைப்பில் இருந்த மூத்த நிர்வாகிகள் பலர், பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா என்ற அமைப்பை உருவாக்கி, நம் நாட்டின் ஒற்றுமையை சீர்குலைக்கும் நோக்கில் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டனர்.
இந்த அமைப்பின் மூலம் ஹவாலா போன்ற வழிகளில் திரட்டப்பட்ட, 131 கோடி ரூபாய் நிதி, பயங்கரவாத செயல்களுக்கு பயன்படுத்தப்பட்டது.
இந்த நிதியில், கேரளாவின் பல்வேறு பகுதிகளில் அறக்கட்டளைகளை உருவாக்கி, பி.எப்.ஐ., அமைப்பின் கீழ் சொத்துகளை சேர்த்தனர்.
இதற்கிடையே, இந்த அமைப்பின் செயல்பாட்டுக்கு கடந்த 2022ல் மத்திய அரசு தடை விதித்த நிலையில், 25க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
இது தொடர்பாக, என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பு மற்றும் மாநில போலீசாரால் தனித்தனியே விசாரணை நடத்தி குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டன.
இதேபோல், சட்டவிரோதமாக நிதி திரட்டப்பட்டது குறித்து அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் கேரளாவின் ஆலப்புழா, பத்தனம்திட்டா, வயநாடு, மலப்புரம், பாலக்காடு, திருவனந்தபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக சொத்துகளை பி.எப்.ஐ., அமைப்பினர் வாங்கியதை அமலாக்கத்துறையினர் கண்டறிந்தனர். இவற்றின் மொத்த மதிப்பு, 131 கோடி ரூபாய்.
இதற்கிடையே, இந்த அமைப்புக்கு சொந்த மான சொத்துகளை அமலாக்கத்துறையினர் முடக்கி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, 67.03 கோடி ரூபாய் சொத்துகள் முடக்கப்பட்டு உள்ளன.
இதன்படி, இதுவரை மொத்தம், 129 கோடி ரூபாய் சொத்துகள் முடக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

