சமாஜ்வாதி எம்.பி.,யுடன் நிச்சயதார்த்தம்; கிரிக்கெட் வீரருக்கு தேர்தல் கமிஷன் 'கல்தா'
சமாஜ்வாதி எம்.பி.,யுடன் நிச்சயதார்த்தம்; கிரிக்கெட் வீரருக்கு தேர்தல் கமிஷன் 'கல்தா'
ADDED : ஆக 04, 2025 03:09 AM

லக்னோ: சமாஜ்வாதி எம்.பி., பிரியா சரோஜுடன் திருமண நிச்சயம் செய்ததால், உத்தர பிரதேசத்தில் தேர்தல் கமிஷனின் வாக்காளர் விழிப்புணர்வு பிரசாரத்தில் இருந்து இந்திய கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங் நீக்கப்பட்டார்.
உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு தேர்தலில் ஓட்டளிப்பது குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த, இந்திய கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங், 27, 'மாநில ஐகானாக' நியமிக்கப்பட்டார்.
மாநில தேர்தல் கமிஷன் வெளியிட்ட விழிப்புணர்வு பிரசாரத்தில், ரிங்கு சிங் புகைப்படம் இடம் பெற்றது.
கடந்த ஜூன் 8ல், உத்தர பிரதேசத்தின் ஜான்பூர் மாவட்டத்தின் மச்லிஷஹர் தொகுதியின் சமாஜ்வாதி எம்.பி., பிரியா சரோஜுக்கும், கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங்குக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது.
தேர்தல் கமிஷனால் ஐகானாக நியமிக்கப்படும் நபர், கட்சி சார்பின்றி இருக்க வேண்டும் என்ற விதி உள்ளது.
ஆனால், உத்தர பிரதேசத்தில் பிரதான எதிர்க்கட்சியான சமாஜ்வாதியின் எம்.பி.,யை, ரிங்கு சிங் நிச்சயதார்த்தம் செய்ததால், அவரது நியமனம் குறித்து விமர்சனங்கள் எழுந்தன.
இந்நிலையில், வாக்காளர் விழிப்புணர்வு பிரசாரத்தில் இருந்து கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங்கை நீக்கி, உத்தர பிரதேச தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
மேலும் அவரது புகைப்படம் அச்சிடப்பட்ட விளம்பரங்கள், பேனர்கள், போஸ்டர்களும் திரும்பப் பெறப்பட்டு வருகின்றன.