ஆம் ஆத்மி முன்னாள் அமைச்சர் வீட்டில் அமலாக்க துறை ரெய்டு
ஆம் ஆத்மி முன்னாள் அமைச்சர் வீட்டில் அமலாக்க துறை ரெய்டு
ADDED : ஆக 27, 2025 02:59 AM

புதுடில்லி : டில்லியில் ஆம் ஆத்மி ஆட்சியில் மருத்துவ உட் கட்டமைப்பு பணிகளில் நடந்த ஊழல் தொடர்பாக, அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் சவுரவ் பரத்வாஜுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறையினர் நேற்று சோதனை நடத்தினர்.
டில்லியில் முதல்வர் ரேகா குப்தா தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது.
இங்கு, 2015 முதல் 2025 பிப்., வரை 10 ஆண்டுகள் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடந்தது.
அப்போது, சுகாதாரத் துறையில் மருத்துவமனை கட்டுமானம் உள்ளிட்ட உட்கட்டமைப்பு பணிகள், 5,590 கோடி ரூபாயில் செயல்படுத்த திட்டமிடப்பட்டது.
ஆனால், இந்த பணிகள் குறித்த காலத்தில் முடியவில்லை என்றும், செலவுகள் 100 சதவீதம் வரை உயர்ந்ததாகவும் பா.ஜ., குற்றஞ்சாட்டியது.ஒப்பந்ததாரர்கள் பலனடைய இத்தகைய செயல்களில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப் பட்டது. இது தொடர்பாக, முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் சவு ரவ் பரத்வாஜ் உட்பட பலர் மீது, லஞ்ச ஒழிப்பு போலீசார் ஜூன் 26ல் வழக்கு பதி வு செய்தனர்.
அந்த வழக்கின் அடிப்படையில் அமலாக்கத் துறையினர், பண மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்தனர்.
இந்த வழக்கில் தொடர்புடைய முன்னாள் அமைச்சர் சவுரவ் பரத்வாஜ், ஒப்பந்ததாரர்கள், ரியல் எஸ்டேட் அதிபர்கள், அரசு அதிகாரிகள் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் நேற்று அமலாக்கத் துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.
டில்லியில் 13 இடங்களில் நடந்த சோதனையில், முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப் பட்டன.
அமலாக்க துறையின் இந்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்த ஆம் ஆத்மி மூத்த தலைவர் மணீஷ் சிசோடியா, ''இந்த வழக்கு பரத்வாஜ் அமைச்சராக இல்லாத காலக் கட்டத்துடன் தொடர்புடையது. ஆனால், அவரது இடங்களில் சோதனை நடந்துள்ளது.
''பிரதமர் மோடியின் பட்டப்படிப்பு குறித்த கேள்விகளை திசை திருப்ப இந்த முயற்சி யி ல் ஈடுபட்டுள்ளனர் ,'' என்றார்.