காற்று மாசை கட்டுப்படுத்த அடுத்த 15 நாள் முக்கியமானது சுற்றுச் சூழல் அமைச்சர் தகவல்
காற்று மாசை கட்டுப்படுத்த அடுத்த 15 நாள் முக்கியமானது சுற்றுச் சூழல் அமைச்சர் தகவல்
ADDED : அக் 26, 2024 08:41 PM
புதுடில்லி:“வடமாநிலங்களில் காற்று மாசை கட்டுப்படுத்த அவசரத் தேவை ஏற்பட்டுள்ளது. அடுத்த 15 நாட்கள் முக்கியமானது,”என, சுற்றுச் சூழல் துறை அமைச்சர் கோபால் ராய் கூறினார்.
தலைநகர் டில்லி மற்றும் அண்டை மாநிலங்களில் அதிகரித்து வரும் காற்று மாசை கட்டுப்படுத்துவது தொடர்பாக, மத்திய அமைச்சர்கள் சிவ்ராஜ் சிங் சவுகான், பூபேந்தர் யாதவ் ஆகியோர் தலைமையில் நேற்று முன் தினம் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
டில்லி, பஞ்சாப், ஹரியானா மற்றும் உத்தர பிரதேச மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் பங்கேற்றனர்.
இதுகுறித்து, டில்லி சுற்றுச் சூழல் துறை அமைச்சர் கோபால் ராய் கூறியதாவது: இந்த ஆண்டு கூட்டம் மாசு கட்டுப்பாடு தொடர்பான மத்திய அரசின் ஆலோசனைக் கூட்டம் தாமதமாக நடத்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதமே கூட்டம் நடத்தி பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. ஆனால், இந்த ஆண்டு காற்று மாசு மிகவும் மோசமான நிலைக்கு வந்தவுடந்தான் ஆலோசிக்கப்படுகிறது. மூன்று மாதங்களுக்கு முன்பே நடத்தி இருந்தால், காற்று மாசை கட்டுக்குள் கொண்டு வந்திருக்கலாம்.
பஞ்சாப் மாநிலத்தில் பயிர்க் கழிவுகள் எரிப்பது இந்த ஆண்டு மிகவும் குறைந்துள்ளது. கடந்த 2022ல் 5,000மாக இருந்த பயிர்க் கழிவு எரிப்பு வழக்குகள் இந்த ஆண்டு 1,500ஆக சரிந்துள்ளது.
அதேநேரத்தில், ஹரியானா மற்றும் உத்தரபிரதேசத்தில் இந்த ஆண்டு அதிக இடங்களில் பயிர்க் கழிவுகள் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளன. இது, தலைநகர் டில்லியில் காற்று மாசு அதிகரிப்புக்கு முக்கியக் காரணமாக அமைந்து விட்டது.
டில்லி, பஞ்சாப், ஹரியானா மற்றும் உத்தர பிரதேசம் உட்பட வடமாநிலங்களுக்கு அடுத்த 15 நாட்கள் மிக முக்கியமானவை. வடமேற்கில் இருந்து வீசும் பருவக் காற்று டில்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் காற்று மாசை அதிகரிக்க வாய்ப்புள்ளது. பயிர்க் கழிவு எரிப்பது குறைந்தாலும், தீபாவளிக்குப் பிந்தைய காலம் முக்கியமானதாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.