மருந்து நிறுவனங்களுக்கு சாதகமாக செயல்பட்ட நிர்வாகி 'சஸ்பெண்ட்' குழந்தைகள் பலி
மருந்து நிறுவனங்களுக்கு சாதகமாக செயல்பட்ட நிர்வாகி 'சஸ்பெண்ட்' குழந்தைகள் பலி
ADDED : அக் 05, 2025 12:18 AM
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில், மூன்று குழந்தைகளின் இறப்புக்கு காரணமான இருமல் மருந்து நிறுவனங்களுக்கு சாதகமாக செயல்பட்ட மருந்து கட்டுப்பாட்டாளரை, மாநில அரசு 'சஸ்பெண்ட்' செய்ததுடன், அந்நிறுவனங்களின் மீது விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளது.
ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் மூன்று குழந்தைகள் மற்றும் மத்திய பிரதேசத்தின் சிந்த்வாரா மாவட்டத்தில் ஒன்பது குழந்தைகள் என, 12 குழந்தைகள் திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்தனர்.
இதுதொடர்பாக மாநில அரசுகள் நடத்திய விசாரணையில், பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு அளிக்கப்பட்ட இருமல் மருந்தில் நச்சுத்தன்மை கலந்திருப்பதாக புகார் எழுந்தது.
இது தொடர்பாக இரு மாநில அரசுகளும் தனித் தனியே விசாரணை நடத்தி வருகின்றன.
இந்நிலையில், ராஜஸ்தானில் குழந்தைகளுக்கான இருமல் மருந்து தயாரித்த நிறுவனங்களுக்கு சாதகமாக மருந்து கட்டுப்பாட்டாளர் ராஜாராம் சர்மா என்பவர் செயல்பட்டது தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து மாநில அரசு நடத்திய முதற்கட்ட விசாரணையில், 'கெய்சன் பார்மா' என்ற நிறுவனத்தின் மருந்தில் உள்ள வேதிப்பொருட்களின் கலவையை , அரசு நிர்ணயித்த அளவை விட மாற்றியது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து, மருந்து கட்டுப்பாட்டாளர் ராஜாராம் சர்மாவை சஸ்பெண்ட் செய்து, மாநில அரசு உத்தரவிட்டது.
அத்துடன், கெய்சன் பார்மா நிறுவனத்தின் மீதும் விசாரணை நடத்த ராஜஸ்தான் அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையே, 'டெக்ஸ்ட்ரோ மெத்தோர்பன்' என்ற ரசாயனம் கலந்த மருந்துகளுக்கு அம்மாநில அரசு தடைவிதித்துள்ளது. இதேபோல், மாநில சுகாதாரத்துறை சார்பில் நிபுணர்கள் குழு அமைத்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
இதற்கிடையே, அரசு அங்கீகாரம் பெற்ற மருந்தகங்களில் மட்டுமே மருந்துகளை வாங்கும்படி பொதுமக்களை ராஜஸ்தான் அரசு அறிவுறுத்தி உள்ளது.
இதுபோன்ற உயிர் காக்கும் மருந்துகளில் முறைகேடு செய்யும் மருத்துவ பணியாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
'கோல்ட்ரிப்' மருந்துக்கு தடை
மத்திய பிரதேசத்தின் சிந்த்வாரா மாவட்டத்தில் ஒன்பது குழந்தைகளின் உயிரிழப்புக்கு காரணமான 'கோல்ட்ரிப்' இருமல் மருந்தின் விற்பனைக்கு அம்மாநில அரசு தடை விதித்துள்ளது. பாதிக்கப்பட்ட குழந்தைகள் உட்கொண்ட மருந்துகளை ஆய்வு செய்ததில், அதிக நச்சுத்தன்மை வாய்ந்த 'டைஎத்திலின் கிளைகால்' என்ற வேதிப்பொருள் கலந்திருப்பது உறுதி செய்ததையடுத்து இந்நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டதாக ம.பி., அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
முன்னதாக, தமிழகத்தின் காஞ்சிபுரத்தில் ஸ்ரீசன் பார்மா நிறுவனத்தின் மருந்தின் விற்பனை மற்றும் வினியோகத்தை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. கோல்ட்ரிப் இருமல் மருந்துக்கு கேரள அரசும் தடை விதித்துள்ளது.