டில்லியில் குவிந்த விவசாயிகள் ராம் லீலா மைதானத்தில் போராட்டம்
டில்லியில் குவிந்த விவசாயிகள் ராம் லீலா மைதானத்தில் போராட்டம்
ADDED : மார் 15, 2024 12:53 AM

புதுடில்லி: டில்லியில் உள்ள ராம் லீலா மைதானத்தில் நேற்று குவிந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள், தங்கள் கோரிக்கையை நிறைவேற்றக்கோரி மத்திய அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த 2020 - 21ல் மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாய சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டன.
இதை சம்யுக்தா கிசான் மோர்ச்சா என்ற விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு முன்னின்று நடத்தியது.
தற்காலிகமாக அந்த போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்ட நிலையில், மத்திய அரசின் கொள்கைகளுக்கு எதிராக கிசான் மஸ்துார் மகாபஞ்சாயத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என அந்த சங்கம் அறிவித்திருந்தது.
இதன்படி, டில்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் நேற்று விவசாயிகள் மகாபஞ்சாயத்து கூட்டம் நடந்தது. இதில், ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியானா, குஜராத் உட்பட 10க்கும் மேற்பட்ட மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் பங்கேற்றனர்.
அப்போது, விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை சட்டப்பூர்வமாக்க வேண்டும் என வலியுறுத்தி, அவர்கள் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.
விவசாயிகளின் போராட்டம் காரணமாக நேற்று டில்லியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
'டிராக்டர் உள்ளிட்ட வாகனங்கள் மற்றும் ஆயுதங்களுடன் வந்தால் அனுமதி இல்லை. 5,000 பேருக்கு மேல் போராட்டத்தில் ஈடுபடக் கூடாது' உள்ளிட்ட நிபந்தனைகளை போலீசார் விவசாயிகளுக்கு விதித்து, ராம்லீலா மைதானத்தில் போராட்டம் நடத்த அனுமதி அளித்திருந்தனர்.

