ADDED : டிச 22, 2024 02:35 AM

மூணாறு:கேரள மாநிலம் குமுளி அருகே ஐந்து வயது மகனை கொலை செய்யும் நோக்கத்தில் கடுமையாக துன்புறுத்திய தந்தை, அவரது இரண்டாவது மனைவிக்கு சிறை தண்டனை, அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இடுக்கி மாவட்டம் குமுளி அருகே ஒன்றாம் மைலில் வசித்தவர் ஷெரீப் 38. மனைவி ரம்யா; இரண்டு மகன்கள் விட்டு பிரிந்து சென்றதால், அனிஷாடன் 35 இவர் வசித்தார். திருமணமான அனிஷாவுக்கு ஒரு குழந்தை இருந்த நிலையில், ஷெரீப்பின் இரண்டு மகன்களையும் வைத்து சிரமப்பட்டார்.
துன்புறுத்தினர்
இந்நிலையில் ஒரு மகனை ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்த்த ஷெரீப், ஐந்து வயது மகன் ஷெபீக்கை தன்னுடன் வைத்துக் கொண்டார். மனைவி பிரிந்து சென்ற ஆத்திரத்தில் ஷெரீப், தன்னுடைய வாழ்க்கைக்கு இடையூறு என கருதி அனிஷா ஆகியோர் ஷெபீக்கை கொலை செய்யும் நோக்கத்தில் கொடூரமாக சித்ரவதை செய்தனர்.
அதனால் உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்ட சிறுவனை , 2013 ஜூலை 15ல் கட்டப்பனையில் தனியார் மருத்துவமனையில் கீழே விழுந்தாக கூறி அனுமதித்தனர். ஆனால் சிறுவனின் உடலில் தீக்காயங்கள் உட்பட 150க்கும் மேற்பட்ட காயங்கள் இருந்ததால் டாக்டர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. போலீசார் விசாரணையில் இருவரும் மூன்று ஆண்டுகளாக சிறுவனை துன்புறுத்தியது தெரிந்தது. கட்டப்பனை போலீசார் இருவரையும் கைது செய்தனர். இச்சம்பவம் கேரளாவை உலுக்கிய நிலையில், தொடுபுழா ஒன்றாம் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது.
சிறை தண்டனை
ஷெரீப்புக்கு 9 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.50 ஆயிரம் அபராதம், அனிஷாவுக்கு 15 ஆண்டுகள் சிறை, ரூ.2 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி பால் தீர்ப்பளித்தார்.
வழக்கில் நேரடி சாட்சிகள் இல்லாத நிலையில் சிகிச்சை அளித்த டாக்டர்கள், மருத்துவ சிகிச்சை முக்கிய சாட்சிகளாக எடுத்துக் கொள்ளப்பட்டது.
அரசு தரப்பு சார்பில் வழக்கறிஞர் ராஜேஷ் ஆஜரானார்.
ஷெபீக் கடந்த சில ஆண்டுகளாக தொடுபுழாவில் தனியார் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். அங்கன்வாடி ஊழியரான ராகினி ,அவரை 11 ஆண்டுகளாக தாயைப் போன்று பராமரித்து வருகிறார்.