ADDED : அக் 26, 2025 11:36 PM

புனே: மஹாராஷ்டிராவில், பாலியல் பலாத்காரத்துக்கு ஆளானதாக உள்ளங்கையில் குறிப்பு எழுதி வைத்து, அரசு பெண் டாக்டர் தற்கொலை செய்த விவகாரத்தில், தலைமறைவாக இருந்த, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்ட போலீஸ் எஸ்.ஐ., கோபால் படானே கைது செய்யப்பட்டார்.
மஹாராஷ்டிராவின் பீட் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் டாக்டர் ஒருவர், சதாரா மாவட்டத்தின் பல்தானில் உள்ள அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்தார். சமீபத்தில், பல்தானில் உள்ள ஹோட்டல் ஒன்றில் அவர் தற்கொலை செய்து கொண்டார்.
அதிர்ச்சி போலீஸ் எஸ்.ஐ., கோபால் படானே, சாப்ட்வேர் இன்ஜினியரும், தான் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளருமான பிரசாந்த் பாங்கர் ஆகியோர், கடந்த ஐந்து மாதங்களில் பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக, உள்ளங்கையில் குறிப்பு எழுதி வைத்து அவர் தற்கொலை செய்தது, அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மேலும், போலி மருத்துவ அறிக்கைக் கேட்டு எம்.பி., ஒருவர் பலமுறை மிரட்டல் விடுத்ததாகவும் அவர் கடிதம் எழுதி வைத்திருந்தார்.
சஸ்பெண்ட் இந்த விவகாரம் நாடு முழுதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், சாப்ட்வேர் இன்ஜினியரான பிரசாந்த் பாங்கரை சமீபத்தில் போலீசார் கைது செய்தனர்.
நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை, நான்கு நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசாருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் எஸ்.ஐ., கோபால் படானே, 'சஸ்பெண்ட்' செய்யப்ப ட்ட நிலையில் தலைமறைவானார்.
இந்நிலையில், பல்தான் கிராமப்புற போலீஸ் ஸ்டேஷனில், கோபால் படானே நேற்று சரணடைந்தார். தொடர்ந்து, அவரை போலீசார் முறைப்படி கைது செய்தனர்.
நிறுவனமயமாக்கப்பட்ட கொலை!
தற்கொலை செய்த பெண் டாக்டருக்கு, பா.ஜ.,வுடன் தொடர்புள்ள செல்வாக்குமிக்க நபர்கள் அழுத்தம் கொடுத்துள்ளனர். இது தற்கொலை அல்ல; நிறுவனமயமாக்கப்பட்ட கொலை. அதிகாரம் குற்றவாளிகளை காப்பாற்றும் போது, நீதியை எப்படி எதிர்பார்க்க முடியும்? இச்சம்பவம், பா.ஜ., அரசின் மனிதாபிமானமற்ற மற்றும் உணர்ச்சியற்ற தன்மையை அம்பலப்படுத்துகிறது. ராகுல் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர், காங்.,
நீதிக்காக போராடுவேன்!
பெண் டாக்டர் தற்கொலை விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம். இந்த விவகாரத்தில் பரவும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். இச்சம்பவம் மிகவும் துயரமானது; துரதிருஷ்டவசமானது. நீதியை உறுதி செய்வதில் சமரசம் செய்ய மாட்டேன். நீதி கிடைக்கும் வரை போராடுவேன். சம்பந்தப்பட்டோர் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும். தேவேந்திர பட்னவிஸ் மஹாராஷ்டிர முதல்வர், பா.ஜ.,

