ADDED : அக் 22, 2025 11:35 PM
ஹவுரா: மேற்கு வங்கத்தின் ஹவுரா மாவட்டம், உலு பெரியாவில் சரத் சந்திர சட்டோபாத்யாய் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை உள்ளது. இங்கு அனுமதிக்கப்பட்டிருந்த கர்ப்பிணியை பார்க்க, அவரது உறவினர்கள் சிலர் வந்திருந்தனர்.
அப்போது, சரியாக சிகிச்சை அளிக்கவில்லை என கூறி பெண் டாக்டரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது திடீரென அவர்கள் பெண் டாக்டரை தாக்கினர்; மேலும், பலாத்காரம் செய்து விடுவதாகவும் மிரட்டினர்.
சம்பவம் பற்றி அறிந்த டாக்டர் சங்கத்தினர், உலுபெரியா மருத்துவமனைக்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர்; டாக்டர்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளதாக கவலை தெரிவித்தனர். இதையடுத்து, பாதிக்கப்பட்ட டாக்டர் அளித்த புகாரின்படி, உலுபெரியா பகுதியில் போக்குவரத்து போலீசாக பணியாற்றும் ஊர்க்காவல் படை வீரர் ஷேக் பாபுலால் மற்றும் ஷேக் சாம்ராட், ஷேக் ஹசிபுல் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.