கேரள ஏரியில் தீ விபத்து: 10 மீன்பிடி படகுகள் நாசம்
கேரள ஏரியில் தீ விபத்து: 10 மீன்பிடி படகுகள் நாசம்
ADDED : டிச 08, 2025 12:15 AM

கொல்லம்: கேரளாவின் கொல்லம் ஏரியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 10 மீன்பிடி படகுகள் முற்றிலும் எரிந்து சேதமடைந்தன.
கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் உள்ள அஞ்சலுமூடு அருகேயுள்ள குரிபுழா பகுதியில், அஷ்டமுடி ஏரி உள்ளது. இங்கு, நேற்று முன்தினம் இரவு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகு ஒன்றில் திடீரென தீப்பிடித்தது. அது மளமளவென அருகே நிறுத்தப்பட்டிருந்த மற்ற மீன்பிடி படகுகளுக்கும் பரவியது.
தீயணைப்பு துறையினர், நீண்ட போராட்டத்துக்கு பின் நேற்று காலை தீயை அணைத்தனர். எனினும், 10 மீன்பிடி படகுகள் முற்றிலும் எரிந்து சேதமடைந்தன.
இதுகுறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், படகில் வைக்கப்பட்டிருந்த காஸ் சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
சம்பவம் பற்றி அறிந்த கொல்லம் லோக்சபா எம்.பி., பிரேமசந்திரன், “கடந்த சில நாட்களுக்கு முன் முக்கட் பகுதியில் தீ விபத்து நடந்த நிலையில், அஷ்டமுடி ஏரியில் ஏற்பட்ட தீ விபத்தால் மீன்பிடி தொழிலை சார்ந்துள்ள ஏராளமான மீனவர்களுக்கு கடும் இழப்பு ஏற்பட்டுள்ளது.
“எனவே, தீ விபத்து குறித்து முழுமையான விசாரணை நடத்த அரசு முன்வர வேண்டும், தீ விபத்துக்கான காரணத்தை கண்டறிந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்,” என்று கோரிக்கை விடுத்தார்.

