ADDED : அக் 19, 2025 12:40 AM

பதேகர் சாஹிப்: பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் - -சஹர்சா இடையே கரீப் ரதம் எக்ஸ்பிரஸ் ரயில் தீப்பற்றி எரிந்தது. இந்த விபத்தில் காயம் அடைந்த ஒருவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகரில் இருந்து நேற்று காலை சஹர்சா நகருக்கு கரீப் ரதம் எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டது.
காலை 7:30 மணிக்கு சிர்ஹிந்த் ரயில் நிலையம் அருகே நேற்று காலை சென்ற போது 'ஏசி' பெட்டி தீப்பற்றி எரிந்தது. ஒரு பயணி அபாய சங்கிலியை இழுத்தார்.
ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டது. தீப்பற்றிய பெட்டியில் இருந்து மட்டுமின்றி அனைத்து பெட்டிகளில் இருந்தும் பயணியர் வெளியேறினர். அடுத்த இரண்டு பெட்டிகளுக்கும் தீ பரவியது.
தகவல் அறிந்து வந்த தீயணைப்புப் படையினர் தீப்பற்றிய மூன்று பெட்டிகளையும் ரயிலில் இருந்து ரயில்வே ஊழியர்கள் உதவியுடன் பிரித்தனர். அதே நேரத்தில் தீயணைக்கும் பணிகளும் நடந்தன. ஒரு மணி நேரத்துக்குள் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
தீ விபத்தில் காயம் அடைந்த 32 வயது பெண் பயணி, பதேகர் சாஹிப் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மாற்று ரயில் பெட்டிகள் வரவழைக்கப்பட்டு இணைக்கப்பட்டன. அதன்பின், ரயில் புறப்பட்டுச் சென்றது.
இந்த விபத்தில் 'ஏசி' பெட்டியில் இருந்த சில பயணியரின் உடைமைகள் தீயில் எரிந்து கருகின. சேதம் அடைந்த மூன்று ரயில் பெட்டிகளை ரயில்வே உயர் அதிகாரிகள் ஆய்வு செய்து தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.