காங்கிரஸ் எம்.எல்.ஏ., வீட்டில் வெளிநாட்டு துப்பாக்கிகள் பறிமுதல்
காங்கிரஸ் எம்.எல்.ஏ., வீட்டில் வெளிநாட்டு துப்பாக்கிகள் பறிமுதல்
ADDED : ஜன 06, 2024 01:17 AM

சண்டிகர், சட்டவிரோத சுரங்க வழக்கு தொடர்பாக ஹரியானாவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ., மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் நடந்த சோதனையில், 5 கோடி ரூபாய் ரொக்கம், 100க்கும் மேற்பட்ட மதுபாட்டில்கள், சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த வெளிநாட்டு துப்பாக்கிகள் உள்ளிட்டவற்றை அமலாக்கத் துறையினர் நேற்று பறிமுதல் செய்தனர்.
ஹரியானாவில் முதல்வர் மனோகர்லால் கட்டார் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள யமுனா நகர் மற்றும் அதை சுற்றியுள்ள மாவட்டங்களில் கிராவல், மண், ஜல்லி ஆகியவை சட்டவிரோதமாக சுரண்டப்படுவதாக புகார் எழுந்தது.
இது தொடர்பான விசாரணையில், ஹரியானாவின் காங்கிரஸ் எம்.எல்.ஏ., சுரேந்தர் பன்வர், இந்திய தேசிய லோக்தளம் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ., தில்பாக் சிங் ஆகியோருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து இவர்கள் இருவர் மீதும் சட்டவிரோத சுரங்க வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த விவகாரத்தில் பிரத்யேகமாக இணைய தளம் துவங்கி பணப்பரிமாற்றம் செய்தது தெரியவந்ததை அடுத்து, சிங் மற்றும் பன்வர் மீது சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.
இருவருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த இரண்டு நாட்களாக சோதனை நடத்தினர். சிங் மற்றும் பன்வரின் வீடுகள், அலுவலகங்கள், அவர்களுக்கு சொந்தமான இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டது.
இதில், 5 கோடி ரூபாய் ரொக்கம், 100 லிட்டர் மது பாட்டில்கள், சட்டவிரோதமாக வெளிநாட்டில் இருந்து எடுத்து வரப்பட்ட துப்பாக்கிகள், 300 தோட்டாக்கள், 5 கிலோ எடையுள்ள மூன்று தங்க பிஸ்கட்டுகள் மற்றும் தங்க நகைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.