ஜம்மு - காஷ்மீர் முன்னாள் கவர்னர் சத்யபால் மாலிக் காலமானார்
ஜம்மு - காஷ்மீர் முன்னாள் கவர்னர் சத்யபால் மாலிக் காலமானார்
ADDED : ஆக 06, 2025 02:22 AM

புதுடில்லி : ஜம்மு - காஷ்மீர் முன்னாள் கவர்னர் சத்யபால் மாலிக், உடல்நலக் குறைவால் டில்லியில் நேற்று காலமானார். அவருக்கு வயது, 79.
ஜம்மு - காஷ்மீர், பீஹார், கோவா, மேகாலயா மாநிலங்களின் கவர்னராக பதவி வகித்த சத்யபால் மாலிக், சிறுநீரகம் தொடர்பான பிரச்னையால் நீண்ட காலமாக அவதிப்பட்டு வந்தார்.
டில்லியில் உள்ள ராம் மனோகர் லோஹியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
அவரது மறைவுக்கு பிரதமர் மோடி, லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
உத்தர பிரதேசத்தின் பாக்பத் மாவட்டத்தைச் சேர்ந்த சத்யபால் மாலிக், முன்னாள் பிரதமர் மறைந்த சவுத்ரி சரண் சிங்கின், பாரதிய கிராந்தி தளம் சார்பில், 1974ல் எம்.எல்.ஏ., ஆனார்.
அக்கட்சி ஜனதா தளத்துடன் இணைந்ததை அடுத்து, ராஜ்யசபா, லோக்சபா எம்.பி.,யாகவும் அவர் பதவி வகித்தார்.
காங்கிரஸ், லோக் தளம், சமாஜ்வாதி ஆகிய கட்சிகளில் சேர்ந்த அவர், மத்திய பா.ஜ., அரசால், பீஹார் கவர்னராக 2017ல் நியமிக்கப்பட்டார்; ஒடிஷா கவர்னர் பொறுப்பையும் கூடுதலாக கவனித்தார்.
இதையடுத்து, ஜம்மு - காஷ்மீர் கவர்னராக 2018ல் அவர் நியமிக்கப்பட்டார். 2019ல் ஜம்மு - காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து, புல்வாமா பயங்கரவாத தாக்குதல், உள்ளிட்ட சம்பவங்களின்போது சத்யபால் மாலிக் கவர்னராக இருந்தார்.
கோவா, மேகாலயா மாநிலங்களின் கவர்னராகவும் பதவி வகித்தார். கடந்த சில ஆண்டுகளாக மத்திய பா.ஜ., அரசை வெளிப்படையாக விமர்சித்து வந்தார்.
குறிப்பாக, புல்வாமா பயங்கரவாத தாக்குதலின் போது பாதுகாப்பு குறைபாடு இருந்ததாகவும் அவர் பேட்டி அளித்தது, பர பரப்பை ஏற்படுத்தியது.