தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ சந்திரபாபு - பவன் கல்யாண் இடையே புகைச்சல்!ஆந்திராவில் உடைகிறதா ஆளும் கூட்டணி?

சந்திரபாபு - பவன் கல்யாண் இடையே புகைச்சல்!ஆந்திராவில் உடைகிறதா ஆளும் கூட்டணி?

சந்திரபாபு - பவன் கல்யாண் இடையே புகைச்சல்!ஆந்திராவில் உடைகிறதா ஆளும் கூட்டணி?


UPDATED : ஆக 26, 2026 09:04 PM

ADDED : ஆக 26, 2026 08:42 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 26, 2026 09:04 PM ADDED : ஆக 26, 2026 08:42 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

--சிறப்பு நிருபர்-

ஆந்திராவில் அதிகார போட்டி காரணமாக, முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கும், நடிகரும் துணை முதல்வருமான பவன் கல்யாணுக்கும் இடையே பனிப்போர் மூண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், ஆளும் கூட்டணிக்குள் அதிருப்தி வெடித்திருப்பதாக கூறப்படுகிறது.

ஆந்திராவில், முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில், தெலுங்கு தேசம் கட்சி, ஜனசேனா கட்சி மற்றும் பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. ஜனசேனா கட்சியை சேர்ந்த நடிகர் பவன் கல்யாண், துணை முதல்வராக உள்ளார். அவரது கட்சிக்கு, ஆந்திர சட்டசபையில் 21 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். லோக்சபாவில் இரு எம்.பி.,க்கள் உள்ளனர்.

தேர்தலிலும் நுாறு சதவீத வெற்றி சதவீதத்தை அவர் வைத்து இருக்கிறார். இதனால், ஆந்திர அரசியலில் செல்வாக்கு மிக்க தலைவராக பவன் கல்யாண் உருவாகி வருகிறார். இந்நிலையில், முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மகனும், அமைச்சருமான நாரா லோகேஷ் அனைத்து துறைகளிலும் ஆதிக்கம் செலுத்தி, தனி அதிகார மையமாக செயல்படுவதை பவன் கல்யாண் விரும்பவில்லை என கூறப்படுகிறது.

இது குறித்த அதிருப்தியை அவர் வெளிப்படையாக பேசாவிட்டாலும், தன் நடவடிக்கைகள் மூலம் சந்திரபாபு நாயுடுவுக்கு உணர்த்தி வருகிறார். நடந்து முடிந்த நான்கு அமைச்சரவை கூட்டங்கள் மற்றும் சட்டசபை கூட்டங்களில் பங்கேற்காமல் பவன் கல்யாண் புறக்கணித்தார். சமீபத்தில் கூட தலைநகர் அமராவதியையும், விசாகப்பட்டினத்தையும் இணைக்கும் முக்கிய சாலை திறப்பு விழாவில் பங்கேற்பதை தவிர்த்தார்.

முதல்வர் சந்திரபாபு நாயுடு இவ்விழாவை கோலாகலமாக நடத்திக் கொண்டிருந்த அதே நாளில், தன் பொறுப்பில் உள்ள வனத்துறை ஏற்பாடு செய்த யானைகள் தொடர்பான விழாவுக்காக அவர் விசாகப்பட்டினம் சென்றிருந்தார். உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்புகள் வெளியாவதற்கு முன்பாகவே, பவன் கல்யாணின் மூத்த சகோதரரும், நடிகருமான நாக பாபுவுக்கு அமைச்சர் பதவி வழங்குவதாக சந்திரபாபு நாயுடு உறுதி அளித்து இருந்தார்.

ஆனால், ஜாதி மற்றும் பிராந்திய கணக்குகள் காரணமாக அந்த வாக்குறுதியை நிறைவேற்றுவதில் தாமதம் ஏற்பட்டது. இதன் காரணமாகவும் முதல்வர் சந்திரபாபு நாயுடு மீது கடும் அதிருப்தி அடைந்த பவன் கல்யாண், அவரிடம் கூட சம்மதம் கேட்காமல் தன் துறையின் கீழ் வரும், 'ஆந்திரா கிரீன்' நிர்வாக குழுவின் தலைவராக கேபினட் அந்தஸ்து கொண்ட பொறுப்பை நாகபாபுவுக்கு வழங்கினார்.

உடல்நிலையை காரணம் காட்டி அரசு பணிகளை புறக்கணிப்பதையும் பவன் கல்யாண் வாடிக்கையாக வைத்திருப்பதாக கூறப்படுகிறது. அதே சமயம், ஹைதராபாதில் நடக்கும் தனிப்பட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்க தனி விமானத்தில் பறக்கிறார் என்ற விமர்சனங்களும் எழுந்துள்ளன.

பவன் கல்யாணின் இந்நடவடிக்கை தெலுங்கு தேச கட்சியினரை முகம் சுளிக்க வைத்துள்ளது. இது கூட்டணி ஆட்சி நிர்வாகத்திற்குள் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கூட்டணிக்குள் அதிருப்தி அதிகரித்து வரும் சூழலில், பவன் கல்யாண் அதில் இருந்து வெளியேறி தனித்து செயல்பட வேண்டும் என அவர் சார்ந்த காபு சமூகத்தினர் அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.

ஆந்திராவில் பெரும்பான்மையாக உள்ள காபு சமூகத்தினர், இம்முறை தங்களது தரப்பில் இருந்து முதல்வர் வரவேண்டும் என்ற விருப்பத்தையும் வெளிப்படையாக தெரிவித்து வருகின்றனர். விரைவில் நடக்கவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் கூடுதல் இடங்களை கேட்டுப் பெற ஜனசேனா திட்டமிட்டிருந்த நிலையில், கூட்டணிக்குள் ஏற்பட்டுள்ள புகைச்சல், காபு சமூகத்தினர் கொடுத்து வரும் அழுத்தம் ஆகியவை அம்மாநில அரசியலில் புயலை கிளப்பி இருக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us