சூதாட்ட செயலியால் பண மோசடி: கிரிக்கெட் வீரர்களுக்கு ஈ.டி., 'சம்மன்'
சூதாட்ட செயலியால் பண மோசடி: கிரிக்கெட் வீரர்களுக்கு ஈ.டி., 'சம்மன்'
UPDATED : செப் 17, 2025 04:49 AM
ADDED : செப் 17, 2025 04:48 AM

சென்னை: 'சட்ட விரோத சூதாட்ட செயலியின் விளம்பரத்தில் நடித்த, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்கள் யுவராஜ் சிங், ராபின் உத்தப்பா மற்றும் நடிகர் சோனு சூட் ஆகியோர் விசாரணைக்கு ஆஜராக வேண்டும்' என, அமலாக்கத் துறை அதிகாரிகள், 'சம்மன்' அனுப்பி உள்ளனர்.
சட்ட விரோத சூதாட்ட செயலி வாயிலாக, முதலீட்டாளர்களிடம் பல கோடி ரூபாய் பெற்று, மோசடி நடந்துள்ளது. இது தொடர்பாக, டில்லியைச் சேர்ந்த அமலாக்கத் துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.
இந்த மோசடி பின்னணியில், அரசியல் கட்சியினர், நடிகர், நடிகையர், விளையாட்டு வீரர்கள் இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. சூதாட்ட செயலியை நாடு முழுதும் கொண்டு சேர்க்கும் வகையிலான விளம்பரங்களில், அவர்கள் நடித்து கொடுத்து, கோடிக்கணக்கான ரூபாயை சம்பளமாக பெற்றுள்ளனர்.
இதையும் மோசடி கணக்கில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சேர்த்துள்ளனர். மேலும், நடிகர், நடிகையர் உள்ளிட்டோர், வரி ஏய்ப்புக்காக சூதாட்ட செயலியை பயன்படுத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக தொடர் விசாரணை நடக்கிறது.
இந்நிலையில், சூதாட்ட செயலி விளம்பர பண மோசடி தொடர்பாக, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்கள் யுவராஜ் சிங், ராபின் உத்தப்பா மற்றும் நடிகர் சோனு சூட் ஆகியோருக்கு, அமலாக்கத்துறை அதிகாரிகள், 'சம்மன்' அனுப்பி உள்ளனர்.
டில்லியில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில், ராபின் உத்தப்பா, வரும், 22ல்; யுவராஜ் சிங், 23ல்; சோனு சூட் 24ம் தேதி காலை, 10:30 மணிக்கு ஆஜராக வேண்டும் என, சம்மனில் கூறப்பட்டுள்ளது.