இன்ஜினியரிங் மாணவி பலாத்காரம் காங்., மாணவர் பிரிவு தலைவர் கைது
இன்ஜினியரிங் மாணவி பலாத்காரம் காங்., மாணவர் பிரிவு தலைவர் கைது
ADDED : ஜூலை 22, 2025 07:20 AM
புவனேஸ்வர்: ஒடிசாவில், இன்ஜினியரிங் மாணவிக்கு குளிர்பானத்தில் போதைப்பொருள் கலந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக, அம்மாநில காங்., மாணவர் பிரிவு தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குளிர்பானம் ஒடிசாவின் புவனேஸ்வரில் உள்ள இன்ஜினியரிங் கல்லுாரியில் படித்து வந்த 19 வயது மாணவி, மஞ்சேஸ்வர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் ஒன்றை அளித்திருந்தார்.
அதன் விபரம்:
கடந்த மார்ச் மாதம் இரண்டு நண்பர்களுடன் சேர்ந்து, கல்லுாரி கேன்டீனில் காங்கிரஸ் கட்சியின் மாணவர் பிரிவு தலைவர் உதித் பிரதானை சந்திக்க சென்றேன்.
பின்னர், பிரதானின் காரில் நயப்பள்ளியில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு அனைவரும் மது அருந்தினர். நான் மது அருந்த மறுத்ததால், பிரதான் எனக்கு குளிர்பானம் வழங்கினார். அதைக் குடித்த சிறிது நேரத்திலேயே, மயக்கம் ஏற்பட்டது. என்னை வீட்டிற்கு அழைத்துச் செல்லும்படி கேட்டேன்.
ஆனால் அங்கிருந்தவர்கள் என்னை வெளியே செல்ல விடாமல் தடுத்தனர். சிறிது நேரத்தில் சுயநினைவை இழந்துவிட்டேன். நினைவு திரும்பியபோது தான் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானது தெரிய வந்தது.
மிரட்டல் இந்த சம்பவம் குறித்து வெளியே சொன்னால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என பிரதான் மிரட்டினார்.
இவ்வாறு புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பல மாதங்களுக்குப் பின் தைரியமாக அந்தப் பெண், நேற்று முன்தினம் உதித் பிரதான் மீது புகார் அளித்த நிலையில், எப்.ஐ.ஆர்., பதிவு செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து பிரதானை மஞ்சேஸ்வர் போலீசார் கைது செய்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்., கட்சியினர் 50 பேர் போலீஸ் ஸ்டேஷன் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.
பாலியல் குற்றச்சாட்டைத் தொடர்ந்து, காங்., மாணவர் பிரிவான, இந்திய தேசிய மாணவர் சங்கம், உதித் பிரதானை தலை வர் பொறுப்பில் இருந்து இடைநீக்கம் செய்தது.
பாலின ரீதியிலான அநீதியை, ஒருபோதும் சகித்துக்கொள்ளவோ, துணைநிற்கவோ மாட்டோம் என்று அந்த சங்கம் தெரிவித்துள்ளது.