ADDED : ஜன 01, 2025 12:50 AM

ஹூப்பள்ளி; சமையல் காஸ் சிலிண்டர் விபத்தில், நேற்றும் ஒரு பக்தர் உயிரிழந்ததால், பலி எண்ணிக்கை எட்டாக உயர்ந்துள்ளது.
தார்வாட் மாவட்டம், ஹூப்பள்ளியின் உனகல்லின் அச்சவன காலனியில் உள்ள மண்டபத்தில், டிச., 23ல் அய்யப்ப பஜனை நடத்தப்பட்டது. பக்தர்களுக்காக அங்கேயே சமையலும் செய்யப்பட்டது.
பூஜை முடிந்து இரவில் சில அய்யப்ப பக்தர்கள் அங்கேயே தங்கினர். இதில் ஒருவரின் கால், காஸ் சிலிண்டர் மீது பட்டு உருண்டதில், கசிவு ஏற்பட்டது. மண்டபத்தில் தீபம் ஏற்றப்பட்டிருந்ததால், பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதில், ஒன்பது அய்யப்ப பக்தர்கள் படுகாயம் அடைந்தனர்.
உடனடியாக அனைவரும் கிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால், சிகிச்சை பலனின்றி ஒன்றன் பின் ஒன்றாக, ஏழு பேர் உயிரிழந்தனர். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த பிரகாஷ், 41, நேற்று காலை உயிரிழந்தார். இதன் மூலம் பலியானவர்கள் எண்ணிக்கை எட்டாக உயர்ந்துள்ளது.
இவ்விபத்தில், நிஜலிங்கப்பா, சஞ்சய் சவதத்தி, ராஜு மூகெரி, லிங்கராஜு பீரானுார், சங்கர் சவான், மஞ்சுநாத் வாக்மோடே, தேஜஸ்வர் சடாரே, பிரகாஷ் என எட்டு பேர் பலியாகி உள்ளனர்.

