கேரளாவில் சரக்கு ரயில் இன்ஜின் தடம்புரண்டது; நடுவழியில் ரயில்கள் நிறுத்தம்
கேரளாவில் சரக்கு ரயில் இன்ஜின் தடம்புரண்டது; நடுவழியில் ரயில்கள் நிறுத்தம்
ADDED : நவ 28, 2025 07:01 PM

எர்ணாகுளம்: கேரளாவில் சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்தில் சிக்கியது. இதனால் திருச்சூர் செல்லும் ரயில் பாதையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது.
இதுபற்றிய விவரம் வருமாறு;
களமசேரியில் இருந்து உர மூட்டைகளுடன் சரக்கு ரயில் சென்று கொண்டு இருந்தது. திருச்சூர் செல்லும் பாதையில் ரயில் சென்று கொண்டு இருந்த போது, ரயின் இன்ஜின் திடீரென தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கியது.
ரயில் பாதையின் தடுப்பைத் தாண்டி, அங்குள்ள மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது. அப்போது வேறு எந்த ரயில்களும் அதே வழித்தடத்தில் கடக்காததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
சரக்கு ரயில் தடம்புரண்ட காரணத்தால், அவ்வழியே செல்லும் ரயில்கள் 1 மணி நேரத்திற்கும் மேலாக நடுவழியில் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.
சோரனூர் செல்லும் ஒரு வழித்தடத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது. மேலும் தண்டவாளத்தில் மின்தடை ஏற்பட்டதால் ஆலுவா செல்லும் ரயிலும் பாதிக்கப்பட்டது. திருவனந்தபுரம் செல்லும் எரநாடு எக்ஸ்பிரஸ், குருவாயூர்-எர்ணாகுளம் பயணிகள் ரயில் முறையே ஆலுவா மற்றும் அங்கமாலி ரயில் நிலையங்களில் நீண்ட நேரம் நிறுத்தப்பட்டது. இந்தூர் வாராந்திர ரயில் ஒரு மணி நேரம் தாமதமாக இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
விரைவில் ரயில் பாதை சீரமைக்கப்பட்டு சேவைகள் மீண்டும் தொடங்கும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

