ஜி.எஸ்.டி., சிறப்பு குழுவுக்கு சுஷில்குமார் மோடி தலைவர்
ஜி.எஸ்.டி., சிறப்பு குழுவுக்கு சுஷில்குமார் மோடி தலைவர்
ADDED : ஜூலை 19, 2011 12:09 AM

புதுடில்லி : சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு (ஜி.எஸ்.டி.,) தொடர்பான, மாநில நிதி அமைச்சர்களைக் கொண்ட சிறப்பு குழுவின் தலைவராக, பீகார் துணை முதல்வர் சுஷில்குமார் மோடி நியமிக்கப்பட்டுள்ளார்.
சரக்கு மற்றும் சேவை வரி தொடர்பான சட்டத் திருத்த மசோதா, பார்லிமென்டில் நிலுவையில் உள்ளது. இந்த மசோதாவுக்கு, பா.ஜ., ஆளும் மாநில அரசுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த மசோதா நடைமுறைக்கு வந்தால், வரி விதிப்பு முறையில் தங்களுக்கு உள்ள அதிகாரம் பாதிக்கப்படும் என, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில அரசுகள் கருதுகின்றன.
இந்த விவகாரத்தில் கருத்தொற்றுமையை ஏற்படுத்துவதற்காக, மாநில நிதி அமைச்சர்களைக் கொண்ட சிறப்பு குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவின் தலைவராக, மேற்கு வங்க முன்னாள் நிதி அமைச்சர் அஜிம் தாஸ் குப்தா இருந்தார். இந்த குழுவின் புதிய தலைவராக, தற்போது பீகார் துணை முதல்வரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான சுஷில்குமார் மோடி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவரது பெயரை, டில்லி முதல்வர் ஷீலா தீட்சித், ஒடிசா நிதி அமைச்சர் பிரபுல்ல சந்திரா சடாய் ஆகியோர் முன்மொழிந்தனர். அப்போது, மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜியும் உடன் இருந்தார்.
சுஷில்குமார் மோடி கூறுகையில், 'ஜி.எஸ்.டி., போன்ற வரி விதிப்பு தொடர்பான விஷயங்களில், மத்திய அரசு பிடிவாதமாக இருக்கக்கூடாது; நெகிழ்வுடன் நடந்து கொள்ள வேண்டும். இல்லையெனில், இதை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல் ஏற்படும். வரி விதிப்பு தொடர்பான விஷயங்களில், மாநில அரசுகளின் பிரச்னையை, மத்திய அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்' என்றார்.
பா.ஜ., உள்ளிட்ட எதிர்க்கட்சி ஆளும் மாநில அரசுகள், ஜி.எஸ்.டி.,க்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தாலும், ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கும் பீகார் மாநில அரசு, அதற்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளது.
எதிர்க்கட்சியைச் சேர்ந்த ஒருவர், இந்த பதவியில் நியமிக்கப்படுவதன் மூலம், எதிர்க்கட்சிகள், ஜி.எஸ்.டி., விஷயத்தில் பிடிவாதமாக இருக்காது என, மத்திய அரசு நம்புகிறது. இதன் மூலம், ஜி.எஸ்.டி., தொடர்பான சட்டத் திருத்த மசோதா, பார்லிமென்டில் எளிதாக நிறைவேறும் என்றும் மத்திய அரசு கருதுகிறது.