ADDED : பிப் 03, 2024 11:11 PM
பெங்களூரு: கர்நாடக தலைநகர் பெங்களூரில் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில், பி.ஜி.,க்களில் தங்குவோரின் விபரங்களை பதிவு செய்வது கட்டாயம் உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகளை, பெங்களூரு நகர போலீசார் அறிவித்துள்ளனர்.
தகவல் தொழில்நுட்ப துறையில், உலகளவில் பெங்களூரு முதன்மை பெற்றுள்ளது. பல மாநிலத்தவரும், பல வெளிநாட்டினரும் பெங்களூரில் தங்கி உள்ளனர். இவர்களில் பலர் தனியாக வாடகைக்கு வீடு எடுத்தும், பலர், பி.ஜி., எனும் பேயிங் கெஸ்ட் தங்கும் விடுதிகளில் உள்ளனர்.
இந்நிலையில், பி.ஜி., எனும் பேயிங் கெஸ்ட் வீடுகளின் உரிமையாளர்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை பெங்களூரு நகர போலீசார் வெளியிட்டு உள்ளனர்.
அதில் குறிப்பிட்டு உள்ளதாவது:
l பெங்களூரு மாநகராட்சியிடம் இருந்து வர்த்தக அனுமதி சான்றிதழ் பெற வேண்டும்
l புதிதாக தங்க வருவோரின் தற்போதைய புகைப்படம், அடையாள அட்டை, ரத்தம் சம்பந்த உறவினர்கள் விபரம் மற்றும் மொபைல் போன் எண்கள், அவர்களை பார்க்க வருவோர் தொடர்பான தகவல்களை பதிவு செய்ய தனி புத்தகம்
l கர்நாடக பொதுமக்கள் பாதுகாப்பு சட்டப்படி, கண்காணிப்பு கேமராக்கள், தீவிபத்தை தடுக்க தேவையான நடவடிக்கை
l போதைப்பொருள் உட்கொள்வது, வைத்துக் கொள்ள அனுமதியில்லை
l அவசர தேவை எண்களான உள்ளூர் போலீஸ் நிலைய எண்கள், அவசர சேவையான 102, மருத்துவ சேவையான 103, சைபர் கிரைம் சேவையான 1930 என எண் பலகை வைத்திருக்க வேண்டும். இத்துடன் முதலுதவி பெட்டி கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும்
l சமையல்காரர்கள், பாதுகாப்பு ஊழியர்கள் உட்பட மற்றவர்களை பணியில் அமர்த்தும்போது, போலீஸ் சரிபார்ப்பு சான்றிதழ் உட்பட அவர்களின் பின்புலம் தகவல்களை சரிபார்க்க வேண்டும்
l வெளிநாட்டு சுற்றுலா பயணியர் தங்கினாலும், அவர்களின் தகவல்களை அருகில் உள்ள போலீஸ் நிலையத்திலோ அல்லது ஆன்லைன் மூலம் 'விண்ணப்பம் சி' மூலம் விண்ணப்பிக்க வேண்டும்
l பி.ஜி.,க்களில் தங்க அனுமதி பெற்ற நபர்களை மட்டும் அனுமதிக்கவும்
l பாதுகாப்பு நடவடிக்கைகள் அல்லது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இல்லாததால், ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட பி.ஜி., உரிமையாளர் அல்லது மேலாளர் நேரடியாக பொறுப்பேற்க வேண்டும்
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.