ADDED : ஆக 14, 2025 09:29 PM

புதுடில்லி:டில்லி மற்றும் சுற்றுப்புறங்களில் கடந்த சில நாட்களாக பெய்த பலத்த மழையால், வியாழக்கிழமை காலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. சாலைகளில் தண்ணீர் சேர்ந்து, போக்குவரத்துக்கு லாயக்கற்றதாகி விட்டது. இந்நிலையில், நேற்று பகல் முழுவதும் பலத்த மழை பெய்ததால், மக்களின் பாதிப்பு மேலும் அதிகரித்தது.
நேற்று காலை, 8:30 மணி நிலவரப்படி, சப்தர்ஜங் பகுதியில், 1.31 செ.மீ., அயாநகர் பகுதியில் 5.74, பாலம் 4.94, லோதி ரோடு 1.2 செ.மீ., மற்றும் பிரகதி மைதானம் பகுதியில் 9 மி.மீ., மழை அளவு பதிவாகி இருந்தது.
மழையால், மாநகரின் வெப்ப நிலை வெகுவாக குறைத்திருந்தது. டில்லியில் 23,6 டிகிரி செல்ஷியஸ் வெப்ப நிலை பதிவாகி இருந்தது. இது, வழக்கமாக இந்த காலத்தில் பதிவாகும் வெப்ப அளவை விட, 3.2 செல்ஷியஸ் குறைவாகும். நகரின் அதிகபட்ச வெப்ப நிலை 32 டிகிரி செல்ஷியஸ் ஆக பதிவாகி இருந்தது.
மேலும் லஜ்பத் நகர், ரோடக் ரோடு, ஆனந்த் பார்பட், ஜஹாங்கிர்புரியின் ஜி.டி.கே., டிப்போ, ஆதார்ஷ் நகர், ஓல்டு ஜி.டி.ரோடு, குருகிராம் போன்ற பல சாலைகளில், மழை நீர் தேங்கி, போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
பல இடங்களில், ஒரு மணி நேரத்திற்கும் மேலாக, சாலையை கடக்க முடியாமல் பலர் நின்று கொண்டிருந்தனர். லஜ்பத் நகரை சேர்ந்த ஒருவர் இதுபற்றி கூறும் போது,'நான், ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ரிங் ரோடு பகுதியில் நிற்கிறேன். குறிப்பாக, எய்ம்ஸ் மருத்துவமனைக்கு செல்லும் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது. அந்த பகுதியில் ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டு, போக்குவரத்து செயல்படுகிறது. இதனால், இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக, அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது' என்றார்.
தவுலா கான் - குருகிராம் சாலையில், டி.டி.சி., பஸ் ஒன்று சாலையில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீரில் சிக்கிக் கொண்டது. அங்கேயே நீண்ட நேரம் நின்று கொண்டிருந்ததால், சாலைகளில் சென்ற பிற வாகனங்கள், வெள்ள நீரில் நிற்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
பலத்த மழையால், டில்லி நகர மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.
மேலும், இரு சக்கர வாகனங்களில் சென்றவர்கள், வாகனங்கள் மூழ்கும் அளவு நீரில் பயணித்தன. சுப்ரதா பார்க், அவுட்டர் ரிங் ரோடு, துவாரகா செக்டார் 20, குருகிராமின் பசாய் சாலை, காசியாபாத் மற்றும் நொய்டாவிலும் சாலை போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், நேற்று பகல் முழுவதும், 'ஆரஞ்ச்' எச்சரிக்கை விடுத்திருந்தது. இதனால், பலத்த முதல் லேசான மழை நாள் முழுவதும் தொடர்ந்தது. இது, மக்களின் பாதிப்பை மேலும் அதிகரித்தது.
டில்லி நகர சாலைகள் முழுவதும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால், போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நீர் வழித்தடங்களில் சேர்ந்துள்ள மண்ணை அகற்ற வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டும், ஆளும், பா.ஜ., அரசு கண்டுகொள்ளாமல் உள்ளது. இது, பாலிவுட் படத்தின் பாடலை நினைவுபடுத்துகிறது. முதல்வர் ரேகா குப்தா தலைமையிலான அரசும், நீருக்கு அடியில் சென்று விட்டது. - சவுரவ் பரத்வாஜ், ஆம் ஆத்மி கட்சியின் டில்லி பிரிவு தலைவர்