செயற்கை குங்குமம் சபரிமலையில் விற்பனை ஐகோர்ட் அதிருப்தி
செயற்கை குங்குமம் சபரிமலையில் விற்பனை ஐகோர்ட் அதிருப்தி
ADDED : டிச 05, 2025 12:48 AM
கொச்சி: 'சபரிமலை அய்யப்பன் கோவில் சன்னிதானம் உட்பட பல்வேறு இடங்களில், தடையை மீறி செயற்கை குங்குமம் விற்கப்படுகிறது' என, கேரள உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவில் சன்னிதானம் உட்பட அப்பகுதியில் உள்ள பல்வேறு கோவில்களை ஒட்டிய கடைகளில், சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் செயற்கை குங்குமம் விற்கப்படுவதாக புகார் எழுந்தது.
இது தொடர்பான வழக்குகளை கடந்த மாதம் விசாரித்த கேரள உயர் நீதிமன்றம், ரசாயனம் பயன்படுத்தப்பட்டு செயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட குங்குமம் உள்ளிட்ட பூஜை பொருட்களை விற்க தடை விதித்திருந்தது.
இந்நிலையில், தடையை மீறி செயற்கை குங்குமம் விற்கப்படுவதாக, எருமேலி கிராம பஞ்சாயத்து நிர்வாகிகள் கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும், தடையை மீறி செயற்கை குங்குமம் விற்கப்படுவது தெரியவந்துள்ளது. இது தொடர, ஒருபோதும் அனுமதிக்க முடியாது.
குங்குமத்தை வினியோகிக்கும், 'ஐடியல் என்டர்பிரைசஸ்' நிறுவனத்துக்கும், குங்குமத்திற்கு தரச்சான்றிதழ் வழங்கிய, 'கேரளா என்விரோ இன்ப்ராஸ்ட்ரக்சர்ஸ்' ஆய்வகத்துக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடுகிறோம்.
த டையை மீறி குங்குமம் விற்கப்பட்டது குறித்து அடுத்த விசாரணையின் போது, நிறுவனமும், ஆய்வகமும் விளக்கமளிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கு, இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

