யாரை பார்த்தாலும் பயமாக இருக்கிறது என்னை கொல்ல பார்க்கின்றனர்: அலறுகிறார் லாலுவின் மகன்
யாரை பார்த்தாலும் பயமாக இருக்கிறது என்னை கொல்ல பார்க்கின்றனர்: அலறுகிறார் லாலுவின் மகன்
ADDED : நவ 09, 2025 11:00 PM

பாட்னா: பீஹார் முன்னாள் முதல்வரும், ஆர்.ஜே.டி., எனப்படும் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சித் தலைவருமான லாலு பிரசாத் யாதவின் மூத்த மகன் தேஜ் பிரதாப், தன் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறியுள்ளார்.
நேரடி போட்டி பீஹாரில் இரண்டு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடந்து வருகிறது. ஆளும் தே.ஜ., கூட்டணிக்கும், எதிர்க் கட்சிகளின் 'மஹாகட்பந்தன்' கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவி வருகிறது.
மஹாகட்பந்தன் கூட்டணியில், ஆர்.ஜே.டி., இடம்பெற்றுள்ளது. கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக, லாலு பிரசாத் யாதவின் இளைய மகன் தேஜஸ்வி அறிவிக்கப்பட்டுள்ளார்.
அதே நேரத்தில், பீஹாரில் அமைச்சராக இருந்த, கட்சியில் இருந்து நீக்கப்பட்ட, லாலுவின் மூத்த மகன் தேஜ் பிரதாப், ஜனசக்தி ஜனதா தளம் என்ற பெயரில் புதிய கட்சியை துவக்கி, மஹுவா தொகுதியில் களமிறங்கி உள்ளார்.
இந்நிலையில், பாட்னாவில் நேற்று நிருபர்களிடம் தேஜ் பிரதாப் கூறிய தாவது:
எனக்கான பாதுகாப்பு தற்போது அதிகரிக்கப் பட்டுள்ளது. என் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது. எதிரிகள் என்னைக் கொல்ல சதி செய்து வருகின்றனர். எல்லோரும் எதிரிகள் போலவே தெரிகிறார்கள்.
என் தம்பி தேஜஸ்விக்கு பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். அரசியலில் அவர் மென்மேலும் வளர வேண்டும். அது தான் என் விருப்பம்.
இவ்வாறு அவர் கூறினார்.
எதிரிகள் யார் அதே சமயம், எதிரிகள் யார் என்பதை தேஜ் பிரதாப் வெளிப்படையாக தெரிவிக்கவில்லை.
ஒரு ஊடகப்பதிவில், தன் தோழியை 12 ஆண்டுகளாக காதலிப்பதாகவும், அவருடன் இருப்பதாகவும் தேஜ் பிரதாப் கூறியிருந்தார்.
இதை தொடர்ந்து தவறான நடத்தை காரணமாக அவரை கட்சியிலிருந்தும், குடும்பத்திலிருந்தும் நீக்கி, கடந்த மே மாதம் லாலு அறிவித்தார்.

