ஐ.ஐ.எம்., மாணவி பலாத்காரம்: உடன் படிக்கும் மாணவர் கைது
ஐ.ஐ.எம்., மாணவி பலாத்காரம்: உடன் படிக்கும் மாணவர் கைது
ADDED : ஜூலை 13, 2025 03:26 AM

கொல்கட்டா: மேற்கு வங்க மாநிலம் கொல்கட்டா ஐ.ஐ.எம்., கல்வி நிறுவன மாணவி, உடன் படிக்கும் தோழனால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மேற்கு வங்கத்தின் கொல்கட்டாவில், ஐ.ஐ.எம்., எனப்படும் இந்திய மேலாண்மை கல்வி நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
இங்கு படிக்கும் மாணவி ஒருவர், ஹர்தேவ்புர் போலீஸ் ஸ்டேஷனில் நேற்று முன்தினம் புகார் அளித்தார்.
அதன் விபரம்:
என்னுடன் படிக்கும் பரமானந்த் ஜெயின் என்ற மாணவர், பாடம் சம்பந்தமாக பேச வேண்டும் எனக்கூறி கல்லுாரி விடுதிக்கு அழைத்தார்.
அங்கு சென்றபோது குடிக்க குளிர்பானம் அளித்தார். அதை குடித்த சில நிமிடங்களில் நான் சுயநினைவு இழந்தேன்.
நினைவு திரும்பியபோது, நான் பலாத்காரம் செய்யப்பட்டதை உணர்ந்தேன்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டு இருந்தார்.
வழக்குப்பதிவு செய்த போலீசார், மாணவர் பரமானந்த் ஜெயினை கைது செய்தனர். அவரை, ஏழு நாள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துஉள்ளது.
இந்த வழக்கில் திடீர் திருப்பமாக, பாலியல் பலாத்காரம் நடக்கவில்லை என, பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தை மறுத்துள்ளார். அவர் கூறியதாவது:
நேற்று முன்தினம் இரவு 9:34 மணிக்கு எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. என் மகள் ஆட்டோ ரிக்ஷாவில் இருந்து கீழே விழுந்து மயக்கம் அடைந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. போலீசார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
யாரும் தவறாக நடந்துகொள்ளவில்லை என, என் மகள் தெரிவித்தார். ஆனால் போலீசாரோ பலாத்கார வழக்கு பதிவு செய்து ஒருவரை கைது செய்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.