சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கு; ஐஸ்வர்யா கவுடா அதிரடி கைது
சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கு; ஐஸ்வர்யா கவுடா அதிரடி கைது
ADDED : ஏப் 26, 2025 07:46 AM

பெங்களூரு: காங்கிரஸ் முன்னாள் எம்.பி., சுரேஷின் தங்கை என்று கூறி, நகைக்கடைகளில் நகை வாங்கி மோசடி செய்த ஐஸ்வர்யா கவுடாவை, சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறை கைது செய்துள்ளது.
மாண்டியா மலவள்ளி கிருகாவலு கிராமத்தைச் சேர்ந்தவர் ஐஸ்வர்யா கவுடா, 33. பெங்களூரு ஆர்.ஆர்.நகரில் வசிக்கும் இவர், காங்கிரஸ் முன்னாள் எம்.பி., சுரேஷ் தங்கை என்று கூறி, நகைக்கடைகளில் இருந்து நகை வாங்கி, பணம் கொடுக்காமல் மோசடி செய்தார்.
நந்தினி லே - அவுட்டில் உள்ள நகை கடை உரிமையாளர் வனிதா ஐதால் அளித்த புகாரில், ஐஸ்வர்யா, அவரது கணவர் மஞ்சுநாத் கைது செய்யப்பட்டனர். பின், அவர்கள் ஜாமினில் வந்தனர். இந்த வழக்கிற்கு பின், ஐஸ்வர்யா மீது மேலும் சில நகைக்கடை உரிமையாளர்கள் புகார் செய்தனர்.
சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் அவர் ஈடுபட்டிருக்கலாம் என்ற தகவலின்பேரில், அமலாக்கத்துறையினர் நேற்று முன்தினம் ஐஸ்வர்யாவின் வீடுகளில் சோதனை நடத்தினர்.ஐஸ்வர்யாவுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த, தார்வாட் காங்கிரஸ் எம்.எல்.ஏ., வினய் குல்கர்னி வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது.
விசாரணைக்கு சரியாக ஒத்துழைக்காமல், மழுப்பலாக பதிலளித்ததால் ஐஸ்வர்யா நேற்று கைது செய்யப்பட்டார். பொருளாதார குற்றப்பிரிவு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 14 நாட்கள் விசாரிக்க, அமலாக்கத்துறைக்கு, நீதிபதி விஸ்வநாத் கவுடர் அனுமதி அளித்தார்.