குடியேற்ற தடையால் அமெரிக்காவுக்கு தான் இழப்பு: வௌியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சு
குடியேற்ற தடையால் அமெரிக்காவுக்கு தான் இழப்பு: வௌியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சு
ADDED : டிச 04, 2025 04:52 AM

புதுடில்லி: “அமெரிக்கா, ஐரோப்பாவில் குடியேற்றத்துக்கு எதிராக விதிக்கப்படும் தடைகளால், அந்நாடுகளுக்கே கடும் இழப்பு,” என, மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப், பிற நாடுகளில் இருந்து சட்டவிரோதமாக தங்கியிருந்தவர்களுக்கு எதிராக பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தார்.
அதே சமயம், சட்ட பூர்வமாக தங்கியுள்ளவர்களுக்கு கட்டுப்பாடுகளையும் விதித்தார். எச்1பி விசா பெறுவதிலும் கட்டண உயர்வு உள்ளிட்ட பல்வேறு கெடுபிடிகள் விதிக்கப்பட்டன.
ஐரோப்பிய நாடுகளிலும், பிற நாட்டினருக்கு குடியுரிமை வழங்குவதற்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
டில்லியில், நிகழ்ச்சி ஒன்றில் நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பேசியதாவது:
அமெரிக்கா உட்பட பல நாடுகளில் குடியேற்றத்துக்கு எதிராக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவது கவலையளிக்கிறது. இந்த பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்.
புதிதாக குடியேறுபவர்களால் உள்நாட்டிற்கு எந்த நெருக்கடியும் ஏற்படாது. மாறாக, தொழில் நிமித்தமாக வருபவர்களால் அங்கு பொருளாதாரத்தில் வளர்ச்சி ஏற்படும். புதிதாக குடியேறுபவர்களுக்கும், ஏற்கனவே வசிப்பவர்களுக்கும் விதிக்கப்படும் கட்டுப்பாடுகளால், அவரவர் நாட்டிற்கே தீங்கு ஏற்படும்.
கடந்த, 20 ஆண்டுகளாக, வணிகம் தொடர்பான நடவடிக்கைகளை வேண்டுமென்றே வேறு இடங்களுக்கு மாற்ற நினைத்ததால் தான், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகின்றன. அது, அந்நாட்டு அரசுகளின் விருப்பமும், உத்தியும் ஆகும்.
அவற்றை சரிசெய்ய வேண்டிய நடவடிக்கைகளை அவர்கள்தான் கண்டுபிடிக்க வேண்டும். திறமையான, சுதந்திரமான தொழிலாளர்களால் ஏற்பட்ட நன்மைகளை அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் உணர வேண்டும்.
எல்லைகளுக்கு அப்பால் திறமையை பயன்படுத்துவதால், ஏற்படும் நன்மைகள் குறித்து அவர்களுக்கு எடுத்துச் சொல்வது மட்டுமே எங்கள் வேலை. திறமைகளின் ஓட்டத்திற்கு, கட்டுபாடுகளை ஏற்படுத்தினால், அந்நாட்டினருக்கு தான் இழப்பு ஏற்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

