ADDED : டிச 04, 2025 03:14 AM

புதுடில்லி: நாட்டின் சேவைகள் துறை வளர்ச்சி, கடந்த அக்டோபரில் சற்றே குறைந்திருந்த நிலையில், நவம்பரில் மீண்டும் வேகம் எடுத்துள்ளதாக எச்.எஸ்.பி.சி., வங்கி தெரிவித்துள்ளது.
புதிய ஆர்டர்கள் அதிகரிப்பு மற்றும் விலைவாசி உயர்வு கட்டுக்குள் இருந்ததே, இதற்கு முக்கிய காரணங்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக எச்.எஸ்.பி.சி., இந்தியாவின் சேவைகள் துறை, பி.எம்.ஐ., குறியீட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த அக்டோபர் மாதம் 58.90 புள்ளிகளாக இருந்த சேவைகள் துறை பி.எம்.ஐ., குறியீடு, கடந்த மாதம் 59.80 புள்ளிகளாக அதிகரித்துள்ளது. இக்குறியீடு, 50 புள்ளிகளுக்கு அதிகமாக இருந்தால் வளர்ச்சியையும்; குறைவாக இருந்தால் சரிவையும் குறிக்கும்.
கடந்த மாதம் புதிய ஆர்டர்களின் நிலவரம் வலுவாக இருந்தது. ஆசியா, ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து ஆர்டர்கள் கிடைத்ததால், சர்வதேச விற்பனை அதிகரித்தது.
எனினும், பிற நாட்டு நிறுவனங்களின் கடும் போட்டியால், சர்வதேச விற்பனை வளர்ச்சி விகிதம், கடந்த எட்டு மாதங்களில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது.
உள்ளீட்டு பொருட்களின் விலை உயர்வு, கடந்த ஐந்தரை ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது. அதற்கேற்ப சேவைகளின் விற்பனை விலையும் மிகச்சிறிய அளவிலேயே உயர்ந்தது.
வேலைவாய்ப்புகளை பொறுத்தவரை, முந்தைய இரண்டு மாதங்களைப் போல கடந்த நவம்பரிலும் மிதமான வளர்ச்சியே காணப்பட்டது.
தயாரிப்பு மற்றும் சேவைகள் துறையின் கூட்டு வளர்ச்சியை குறிக்கும் கூட்டு பி.எம்.ஐ., குறியீடு, கடந்த மாதம் 59.70 புள்ளிகளாக சற்று குறைந்துள்ளது. இது கடந்த அக்டோபரில் 60.40 புள்ளிகளாக இருந்தது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

