UPDATED : நவ 14, 2025 11:51 PM
ADDED : நவ 14, 2025 11:37 PM

பாட்னா :பீஹார் சட்டசபை தேர்தலில், மொத்தமுள்ள, 243 தொகுதிகளில், 200க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றி, பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, அசுர பலத்துடன் ஆட்சியை தக்க வைத்துள்ளது. தேர்தல் சமயத்தில் பீஹார் பக்கமே எட்டி பார்க்காமல், கடமைக்கென வந்து பிரசாரத்தில் ஈடுபட்ட காங்., - எம்.பி., ராகுலை நம்பிய ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜஸ்வி, மண்ணை கவ்வினார். 'தேர்தல் வியூக வகுப்பாளர்; பல கட்சிகளை வெற்றி பெறச் செய்தவன்' என, மார்தட்டிய பிரசாந்த் கிஷோரை, பீஹார் மக்கள் வெறுங்கையுடன் வீட்டுக்கு அனுப்பினர். பீஹாரில் மொத்தமுள்ள, 243 சட்டசபை தொகுதிகளுக்கு, கடந்த 6 மற்றும் 11ல் இரு கட்டங்களாக தேர்தல் நடந்தது. பல ஆண்டுகளுக்கு பின், அதிகபட்சமாக 67 சதவீத ஓட்டுகள் பதிவாகின.
மேலும், ஆண்களை விட பெண் வாக்காளர்கள் அதிகளவில் ஓட்டளித்தனர். இந்த தேர்தலில், பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணிக்கும், காங்., - ராஷ்ட்ரீய ஜனதா தளம் அடங்கிய, 'மஹாகட்பந்தன்' கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.
தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சியும் தேர்தல் களத்தில் குதித்ததால், பிரசாரம் அனல் பறந்தது.
தே.ஜ., கூட்டணியின் கீழ், மத்திய அமைச்சர் சிராக் பஸ்வானின் லோக் ஜனசக்தி ராம்விலாஸ், மத்திய அமைச்சர் ஜிதன் ராம் மஞ்சியின் ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா, ராஜ்யசபா எம்.பி., உபேந்திர குஷ்வாகாவின் ராஷ்ட்ரீய லோக் மோர்ச்சா ஆகியவை தேர்தலை சந்தித்தன.
பா.ஜ., மற்றும் முதல்வர் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் தலா, 101 தொகுதிகளில் போட்டியிட்ட நிலையில், லோக் ஜனசக்தி, 29ல் களமிறங்கியது.
மஹாகட்பந்தன் கூட்டணியில், லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் 143; காங்., 61 தொகுதிகளில் போட்டியிட்டன.
இந்நிலையில், இரு கட்டங்களில் பதிவான ஓட்டுகள் நேற்று எண்ணப்பட்டன. தபால் ஓட்டுகள் எண்ணத் துவங்கியதில் இருந்தே தே.ஜ., கூட்டணி ஆதிக்கம் செலுத்தியது. தொடர்ந்து, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் பதிவான ஓட்டுகள் எண்ணப்பட்டன. அப்போதும் தே.ஜ., கூட்டணியே பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலையில் வகித்தது.
கடும் போட்டி அளிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட மஹாகட்பந்தன் கூட்டணி, பெரிய அளவில் சோபிக்கவில்லை. ஜன் சுராஜ் கட்சியும் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. பெரும்பான்மைக்கு 122 தொகுதிகள் தேவை என்ற நிலையில், மொத்தமுள்ள 243 தொகுதிகளில், தே.ஜ., கூட்டணி, 202ல் அபார வெற்றி பெற்றுள்ளது.
பா.ஜ., 89; ஐக்கிய ஜனதா தளம் 85 தொகுதிகளை கைப்பற்றி உள்ளன. 143 தொகுதிகளில் போட்டியிட்ட ராஷ்ட்ரீய ஜனதா தளம், 25; 61ல் களமிறங்கிய காங்., 6 தொகுதிகளையும் வென்றுள்ளன. மூன்றில் ஒரு பங்கு தொகுதிகளை இந்த கூட்டணி கைப்பற்றவில்லை. இதனால் எதிர்க்கட்சி அந்தஸ்து கூட கிடைக்காது.
கடந்த, 2020 சட்டசபை தேர்தலில், 75 தொகுதிகளை வென்று தனிப்பெரும் கட்சியாக உருவான ராஷ்ட்ரீய ஜனதா தளம், இந்த தேர்தலில் அவற்றில் பாதியை கூட வெல்லவில்லை.
ஆச்சரியம் அளிக்கிறது!
பீஹார் தேர்தல் முடிவுகள் உண்மையிலேயே
ஆச்சரியம் அளிக்கின்றன. நியாயமற்ற முறையில் தேர்தல் நடப்பதால் நாம் வெற்றி
பெற முடியவில்லை. தோல்விக்கான காரணங்கள் குறித்து நாங்கள் ஆராய்வோம். - ராகுல், லோக்சபா எதிர்க்கட்சி தலைவர், காங்கிரஸ்

