நீரவ் மோடியை விசாரிக்க மாட்டோம் பிரிட்டன் அரசுக்கு இந்தியா உறுதிமொழி
நீரவ் மோடியை விசாரிக்க மாட்டோம் பிரிட்டன் அரசுக்கு இந்தியா உறுதிமொழி
ADDED : அக் 05, 2025 12:40 AM

புதுடில்லி: பஞ்சாப் நேஷனல் வங்கியில், 6,500 கோடி ரூபாய் கடன் மோசடி செய்த வழக்கில் குற்றம் சாட்டப்படும் வைர வியாபாரி நீரவ் மோடியை ஒப்படைத்தால், 'அவரை காவலில் எடுக்க மாட்டோம்; மும்பை சிறையில் அடைக்கப்பட்டு நீதிமன்ற விசாரணையை எதிர்கொள்வார்' என, பிரிட்டன் அரசுக்கு இந்தியா தரப்பில் உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது.
குஜராத்தைச் சேர்ந்த வைர வியாபாரிகளான நீரவ் மோடி மற்றும் மெகுல் சோக்சி ஆகிய இருவரும் பஞ்சாப் நேஷனல் வங்கியில், 13,000 கோடி ரூபாய்க்கு மேல் கடன் பெற்று மோசடி செய்ததாக, 2018ல் சி.பி.ஐ., வழக்கு பதிந்தது.
இதில், 6,500 கோடி ரூபாயை நீரவ் மோடி வெளிநாடுகளில் முதலீடு செய்ததாக அவர் மீது, சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத் துறை பல்வேறு வழக்குகளை பதிந்தது.
நாட்டை விட்டு தப்பி ஓடிய அவர், 2019ல் பிரிட்டனில் கைது செய்யப்பட்டு அந்நாட்டு சிறையில் உள்ளார். அவரை, நம் நாட்டுக்கு அழைத்து வரும் நடவடிக்கையை மத்திய அரசு எடுத்துள்ளது.
இது தொடர்பான வழக்கு பிரிட்டன் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. நீரவ் மோடியை இந்தியாவிடம் ஒப்படைக்க அந்நாட்டு நீதிமன்றம், 2022லேயே ஒப்புதல் வழங்கிவிட்டது.
ஆனால், இந்தியாவில் சிறைச்சாலைகள் மோசமாக இருப்பதாகவும், விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தல் நடக்கும் என்றும், நீதிமன்றத்தில் நீரவ் மோடி முறையிட்டார்.
இதையடுத்து மத்திய அரசு சார்பில் உறுதிமொழி கடிதம் வழங்கப்பட்டுள்ளது. அதில், 'நீரவ் மோடியை நாங்கள் மனிதாபிமான ரீதியில் நடத்துவோம். அவரை மும்பை ஆர்தர் ரோடு சிறையில் அடைப்போம்.
'அங்கு, கைதிகளுக்கான வசதிகள் சர்வதேச தரத்துக்கு இணையானவை. அவரை எந்த விசாரணை அமைப்பும் காவலில் எடுத்து விசாரிக்காது. அவர் மீது நீதிமன்றத்தில் மட்டுமே விசாரணை நடத்தப்படும்' என கூறியுள்ளனர்.