இந்தியா - சீனா எல்லையில் இறுதி கட்டத்தில் படைகள் வாபஸ்
இந்தியா - சீனா எல்லையில் இறுதி கட்டத்தில் படைகள் வாபஸ்
ADDED : அக் 29, 2024 02:29 AM

புதுடில்லி, இந்தியா - சீனா எல்லையில் படைகளை திரும்ப பெறுவது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. விரைவில், இதுகுறித்து முறையான அறிவிப்பு வெளியாகும். அடுத்த இரண்டு நாட்களுக்குள் ரோந்துப் பணிகள் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நம் அண்டை நாடான சீனாவின் ராணுவம், கிழக்கு லடாக் பகுதிக்குள் 2020 மே மாதம் நுழைய முயன்றது; இந்த முயற்சி முறியடிக்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக இரு நாட்டு வீரர்களும் மோதிக் கொண்டனர். இதனால் எல்லையில் இரு நாட்டு படைகளும் குவிக்கப்பட்டன. கடந்த நான்கு ஆண்டுகளாக நடந்த பல சுற்று பேச்சுக்குப் பின், சமீபத்தில் உடன்பாடு ஏற்பட்டது. எல்லையில் இருந்து படைகளை விலக்கி கொள்ளும் நடவடிக்கைகள் துவங்கின.
இதுகுறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது:
எல்லையில் இருந்து படைகளை விலக்கிக் கொள்ளும் நடவடிக்கைகள் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துள்ளன. இரு நாட்டு ராணுவமும் எல்லையில் ஆய்வு செய்து, அதை உறுதி செய்யும். எல்லையில் அமைக்கப்பட்ட தற்காலிக மற்றும் நிரந்தர கட்டமைப்புகள் உள்ளிட்டவையும் அகற்றப்படும்.
இது உறுதி செய்யப்பட்டவுடன், முறையான அறிவிப்பு வெளியிடப்படும். அதைத் தொடர்ந்து, 2020 மே மாதத்துக்கு முன்பு இருந்ததுபோல், எல்லையில் ரோந்துப் பணிகளில் ராணுவம் மீண்டும் ஈடுபடும். இந்த அனைத்துப் பணிகளையும், நாளை மறுதினத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.