இந்தியா ஒரு ஜனநாயக நாடாக இல்லை கட்டமைப்பை பா.ஜ., அழித்து விட்டது: காங்., ராகுல் குற்றச்சாட்டு
இந்தியா ஒரு ஜனநாயக நாடாக இல்லை கட்டமைப்பை பா.ஜ., அழித்து விட்டது: காங்., ராகுல் குற்றச்சாட்டு
UPDATED : நவ 14, 2026 08:45 PM
ADDED : நவ 14, 2026 08:42 PM

ஹைதராபாத்: ‘‘இந்தியா தற்போது உண்மையில் ஒரு ஜனநாயக நாடாக இல்லை. மத்தியில் பா.ஜ., ஆட்சிக்கு வந்த, 2014லேயே நாட்டின் ஜனநாயக கட்டமைப்பு முற்றிலும் அழிக்கப்பட்டு விட்டது,’’ என, காங்கிரசைச் சேர்ந்த லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் குற்றஞ்சாட்டினார்.
தெலுங்கானாவில் முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையில் காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு தலைநகர் ஹைதராபாதில், ஆளும் காங்., ஆதரவுடன், பாரத் உச்சி மாநாடு இரு நாட்கள் நடந்தது. இதில் சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
மாநாட்டின் நிறைவு விழாவில், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் நேற்று பேசியதாவது:
நாம் இதுவரை பார்த்திராத முற்றிலும் புதிய வகையான தேர்தலை, 2014ல் கண்டோம். அதில், ஒரு புதிய வகை பிரசாரமும், அரசியல் நாடகமும் அரங்கேற்றப்பட்டன. நெருக்கமான போட்டிகளுக்கும், கூட்டணி ஆட்சிகளுக்கும் பழக்கப்பட்டிருந்த தேர்தல் முறை, திடீரென தலைகீழாக மாறியது.
எதிர்க்கட்சிகள் அதிர்ச்சியில் இல்லை என, நான் சொன்னால் அது பொய்யாகி விடும். ஓராண்டு, இரண்டாண்டு அல்ல, 10 ஆண்டுகளாக நாங்கள் அதிர்ச்சியில் உறைந்திருந்தோம். மாநில வாரியாக தேர்தல் முடிவுகளை ஆராய்ந்த போது பல உண்மைகள் வெளி வந்தன.
மஹாராஷ்டிராவில் லோக்சபா தேர்தலிலும், சட்டசபை தேர்தலிலும் எதிர்க்கட்சிகள் ஏறத்தாழ ஒரே அளவிலான ஓட்டுகளை பெற்ற போதும், முடிவுகள் தலைகீழாக இருந்தன. இரு தேர்தல்களுக்கும் இடைப்பட்ட மூன்று மாதங்களில், 70 லட்சம் புதிய வாக்காளர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டனர்; அவர்கள் அனைவரும் பா.ஜ.,வுக்கே ஓட்டளித்தனர். இதே போல், மாநிலத்திற்கு மாநிலம் என்னால் ஆதாரங்களை காட்ட முடியும்.
நாங்கள் கண்டறிந்து நிரூபித்துள்ள உண்மை என்னவென்றால், இந்தியா இப்போது உண்மையில் ஒரு ஜனநாயக நாடாக இல்லை. மத்தியில் பா.ஜ., ஆட்சிக்கு வந்த, 2014லேயே நாட்டின் ஜனநாயக கட்டமைப்பு முற்றிலும் அழிக்கப்பட்டு விட்டது.
இந்த மாநாட்டில் பங்கேற்க திட்டமிட்டிருந்த பல சர்வதேச பிரதிநிதிகள் மற்றும் தலைவர்களுக்கு மத்திய அரசால் அனுமதி மறுக்கப்பட்டதற்காக மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். இது, எங்கள் தவறு அல்ல; ஆனால், இங்கு எத்தகைய சூழலை நாங்கள் எதிர்கொள்கிறோம் என்பதற்கு இதுவே சாட்சி.
இவ்வாறு அவர் பேசினார்.
