எண்ணெய் சந்தையின் ஸ்திரத்தன்மையை உறுதி செய்ய சவுதியுடன் இந்தியா கைகோர்ப்பு
எண்ணெய் சந்தையின் ஸ்திரத்தன்மையை உறுதி செய்ய சவுதியுடன் இந்தியா கைகோர்ப்பு
ADDED : ஏப் 24, 2025 01:59 AM

புதுடில்லி: சர்வதேச எண்ணெய் சந்தையின் ஸ்திரத் தன்மையை உறுதி செய்யும் வகையில் சவுதி அரேபியாவுடன் இணைந்து செயல்பட இந்தியா தயாராக உள்ளதாக, கூட்டறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேற்காசிய நாடான சவுதி அரேபியாவுக்கு இரண்டு நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் சென்றார்.
ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து தன் பயணத்தை பாதியிலேயே முடித்துக் கொண்டு நேற்று முன்தினம் இரவே நாடு திரும்பினார்.
பசுமை எரிசக்தி
இந்நிலையில், சவுதி அரேபியாவில் நடந்த சந்திப்புகள், அந்த நாட்டின் பட்டத்து இளவரசரும், பிரதமருமான முகமது பின் சல்மானுடன் நடந்த பேச்சுகள் தொடர்பான கூட்டறிக்கை நேற்று வெளியிடப்பட்டுள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
சர்வதேச எண்ணெய் சந்தையின் ஸ்திரத்தன்மையை மேம்படுத்தவும், உலக எரிபொருள் சந்தையில் சீரான வினியோகத்தை உறுதி செய்யவும், சவுதி அரேபியாவுடன் இணைந்து செயல்பட இந்தியா தயாராக உள்ளது.
இது பெட்ரோலியப் பொருட்கள், பசுமை எரிசக்தி, பருவநிலை மாறுபாடு பிரச்னை ஆகியவற்றுக்கு பொருந்தும்.
பெட்ரோலியப் பொருட்கள் வினியோக சங்கிலி சீராக இருப்பதை உறுதி செய்வோம். அதே நேரத்தில் மாசு ஏற்படுத்தாத பசுமை எரிசக்தியை ஊக்குவிப்போம். குறிப்பாக பசுமை எரிசக்தி மற்றும் ஹைட்ரஜன் எரிசக்தி துறையில் ஒத்துழைத்து செயல்படுவதை இரு தலைவர்களும் வலியுறுத்தினர்.
இதற்கு தேவையான தொழில்நுட்பங்கள், நிபுணத்துவம், சிறந்த நடைமுறைகளை பகிர்ந்து கொள்ளவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஆலோசனை
சவுதி அரேபியாவின், சவுதி பசுமை முன்முயற்சி திட்டத்துக்கு இந்தியா பாராட்டு தெரிவித்துள்ளது. பருவநிலை மாறுபாடு பிரச்னைக்கு முக்கிய தீர்வாக இது அமையும். இதில் தேவையான உதவிகளை செய்யவும் இந்தியா தன் உறுதியை அளித்துள்ளது.
இதைத் தவிர, விண்வெளி, தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகளும் தொடர்ந்து இணைந்து செயல்படுவது குறித்தும் இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.