இந்தியா - பூட்டான் எல்லையில் ஒருங்கிணைந்த சோதனைச்சாவடி
இந்தியா - பூட்டான் எல்லையில் ஒருங்கிணைந்த சோதனைச்சாவடி
ADDED : நவ 08, 2024 02:38 AM

டரங்கா : இந்தியா - பூட்டான் இடையேயான முதல் ஒருங்கிணைந்த சோதனைச்சாவடி, அசாமின் டரங்காவில் நேற்று திறந்து வைக்கப்பட்டது.
நம் அண்டை நாடான பூட்டான் உடனான எல்லையில், வடகிழக்கு மாநிலமான அசாமின் டரங்காவில், பிரமாண்ட ஒருங்கிணைந்த சோதனைச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது.
இரு நாட்டுக்கும் இடையே வர்த்தகம் மற்றும் போக்குவரத்தை சுலபமாக்க இந்த சோதனைச்சாவடி உதவும். இந்தியா - பூட்டான் எல்லைக்கு அருகே, 700 மீட்டர் தொலைவில் இது அமைந்துள்ளது.
மொத்தம், 14.5 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள இந்த சோதனைச் சாவடியில், அலுவலக வளாகம், வாகன நிறுத்தும் இடம், பொருட்களை ஏற்றுவது மற்றும் இறக்குவதற்கான வசதி, எடை பார்க்கும் வசதி, கிடங்கு வசதி உள்ளிட்டவை உள்ளன.
நில துறைமுக ஆணையத்தின் சார்பில் இந்த வளாகம் கட்டப்பட்டுள்ளது.
பூட்டான் பிரதமர் டாஷோ ஷெரிங்க் தோப்கே முன்னிலையில், அசாம் கவர்னர் லக் ஷ்மண் பிரசாத் ஆச்சார்யா, இதை திறந்து வைத்தார்.
''இது இரு நாட்டுக்கு இடையேயான உறவை மேலும் வலுப்படுத்தும். இதன் வாயிலாக வர்த்தகம் மட்டுமல்ல, கலாசார பகிர்வும் நடைபெறும்,'' என, கவர்னர் லக் ஷ்மண் பிரசாத் ஆச்சார்யா குறிப்பிட்டார்.
''மதம் மற்றும் கலாசாரம் ஆகியவை நம் நாடுகளுக்கு இடையேயான பிணைப்பாக உள்ளது. இந்தியாவுடன் இணைந்து வளர்ச்சியடைவதற்கு தயாராக உள்ளோம்,'' என, பூட்டான் பிரதமர் ஷெரிங்க் தோப்கே கூறினார்.

