டிரம்ப் பதவியேற்பு விழாவில் ஜெய்சங்கர் பங்கேற்கிறார்
டிரம்ப் பதவியேற்பு விழாவில் ஜெய்சங்கர் பங்கேற்கிறார்
ADDED : ஜன 13, 2025 01:29 AM
புதுடில்லி: அமெரிக்காவின் புதிய அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்கும் விழாவில், நம் நாட்டின் சார்பில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் அதிபராக உள்ள ஜோ பைடன் பதவிக்காலம் முடிவடைவதை அடுத்து, புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், கடந்த ஆண்டு இறுதியில் நடந்தது. குடியரசு கட்சியைச் சேர்ந்த முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் அபார வெற்றி பெற்றார்.
இதையடுத்து, அமெரிக்காவின் 47வது அதிபராக, வரும் 20ம் தேதி டிரம்ப் பதவியேற்க உள்ளார். அவருக்கு அந்நாட்டு உச்ச நீதிமன்ற நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவி பிரமாணம் செய்து வைக்க உள்ளார்.
இந்நிலையில், டிரம்பின் அழைப்பை ஏற்று பதவியேற்பு விழாவில், நம் நாட்டின் சார்பில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்க உள்ளார். இதை மத்திய வெளியுறவு அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், 'டிரம்ப் பதவி ஏற்பு விழாவில், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்துவார்.
'இந்த பயணத்தின் போது, புதிதாக பதவியேற்க உள்ள நிர்வாகத்துடனும், விழாவுக்கு வரும் பிரமுகர்களுடனும் ஜெய்சங்கர் பேச்சு நடத்துவார்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் வாயிலாக, டிரம்ப் பதவியேற்பு விழாவில், பிரதமர் மோடி பங்கேற்க மாட்டார் என்பது தெரியவந்துள்ளது.
இதற்கிடையே, பதவியேற்பு விழாவுக்கு சீன அதிபர் ஜின்பிங், இத்தாலிய பிரதமர் ஜார்ஜியா மெலோனி, அர்ஜென்டினா அதிபர் ஜாவியர் மிலேய், எல் சல்வேடார் தலைவர் நயீப் புகேல், பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சொநாரோ ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இவர்களுள், சீன அதிபரைத் தவிர பிற தலைவர்கள் அனைவரும் விழாவில் பங்கேற்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.