ADDED : ஜன 01, 2024 06:46 AM

ஆட்சி மாற்றத்தால், அரசியலில் மாற்றம்
கர்நாடகா அரசியலில், 2023ம் ஆண்டு, பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியதை மறுக்க முடியாது. கடந்த மே மாதம் நடந்த சட்டசபை தேர்தலில், ஆளுங்கட்சியாக இருந்த பா.ஜ.,வுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டதால், ஆட்சியை இழந்தது.
பெரும்பான்மையுடன் காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது. நீண்ட ஆலோசனைக்கு பின், முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக சிவகுமாரும் பதவியேற்றனர். நாட்டில் மெல்ல மெல்ல அழிந்து வந்த காங்கிரசுக்கு, கர்நாடகா வெற்றி உற்சாகத்தை ஏற்படுத்தியது என்றே சொல்லலாம். ஐந்து வாக்குறுதி திட்டங்கள், காங்கிரசுக்கு உதவியதை மறுக்க முடியாது.
இதனால், கடந்த பா.ஜ., ஆட்சியின் போது, காங்கிரசில் இருந்து பா.ஜ.,வுக்கு தாவிய தலைவர்கள், பதவியின்மையால் மீண்டும் சொந்த கட்சிக்கு செல்வது குறித்த பேச்சு, அரசியல் வட்டாரத்தில் இன்னமும் ஓடிக் கொண்டிருக்கிறது.
ஆட்சியை தக்க வைக்க முடியாத பா.ஜ.,வுக்கு, அக்கட்சி மேலிடம் அதிர்ச்சி அளித்தது. மாநில தலைவர், சட்டசபை, சட்ட மேலவை தலைவர்களை நியமிக்காமல், காலம் தாழ்த்தியது. பட்ஜெட் கூட்டத்தொடர், போராட்டம் என பல முக்கிய நிகழ்ச்சிகளிலும், யாருடைய தலைமையில் செயல்படுவது என்று தெரியாமல், எம்.எல்.ஏ.,க்கள் குழப்பம் அடைந்தனர்.
இந்த வெற்றிடம் தெரியாதவாறு, முன்னாள் முதல்வர் எடியூரப்பா தலைமையிலேயே பல போராட்டங்கள் நடத்தப்பட்டன. இறுதியில் அவரது இளைய மகன் விஜயேந்திராவுக்கு மாநில தலைவர் பதவி தரப்பட்டது. சட்டசபை எதிர்க்கட்சி தலைவராக அசோக், சட்ட மேலவை எதிர்க்கட்சி தலைவராக கோட்டா சீனிவாச பூஜாரி நியமிக்கப்பட்டனர்.
தங்களுக்கு வேண்டியவர்களையே நியமித்து கொண்டதாக, சொந்த கட்சி தலைவர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர். குறிப்பாக மூத்த எம்.எல்.ஏ., பசனகவுடா பாட்டீல் இன்று வரை குற்றஞ்சாட்டி வருகிறார்.
இதற்கிடையில், சட்டசபை தேர்தலில் எதிர்பார்க்காத அளவுக்கு, ம.ஜ.த.,வுக்கு பின்னடைவு ஏற்பட்டது. கட்சியை உயிர்ப்பித்து கொள்ள என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்த போது, முன்னாள் பிரதமர் தேவகவுடாவுக்கு, பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்தார்.
இந்த பேச்சின் பலனாக, பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் ம.ஜ.த., இணைந்தது. வரும் லோக்சபா தேர்தலில் கர்நாடகாவில் இந்த இரு கட்சிகளும் கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளனர்.
.............
படம்: 31_KRS Dam
மீண்டும் காவிரி போராட்டம்வறட்சியால் விவசாயிகள் அவதி
கர்நாடகாவில் 2022ல் தென்மேற்கு பருவ மழை தீவிரத்தால், பெங்களூரு உட்பட மாநிலத்தின் பல பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஆனால், 2023ல் தென்மேற்கு பருவ மழை பொய்த்து போனது.
அணைகளுக்கு தண்ணீர் வரத்து குறைந்தது. இதனால், காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் உள்ள அணைகள் முழுமையாக நிரம்பவில்லை. மாநிலத்தின், 223 தாலுகாக்கள், வறட்சி பாதித்த பகுதிகளாக அறிவிக்கப்பட்டன. விளை பயிர்கள் காய்ந்தன.
இதே போன்று, தமிழக காவிரி டெல்டா பகுதிகளிலும் மழை குறைவால் விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். இதனால், கர்நாடகா அணைகளில் இருந்து, தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடும்படி, காவிரி நீர் ஒழுங்காற்று வாரியம், காவிரி மேலாண்மை ஆணையம் அவ்வப்போது உத்தரவுகள் பிறப்பித்தன.
வறட்சியால் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட கூடாது என்று கர்நாடகா விவசாயிகள் பல நாட்கள் போராட்டம் நடத்தினர். காவிரி ஆற்றில் இறங்கி, கர்நாடகா அரசுக்கு கண்டனம் தெரிவித்து போராட்டங்கள் நடத்தினர். கன்னட அமைப்பினர், பெங்களூரு, மாண்டியா, கர்நாடகா என வெவ்வேறு நாட்களில் பந்த் நடத்தினர்.
இதற்கிடையில், வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரண நிதி வழங்குவதற்கு, 18,000 கோடி ரூபாய் தரும்படி, மத்திய அரசிடம் முதல்வர் சித்தராமையா கோரிக்கை விடுத்துள்ளார்.
வறட்சி காரணமாக, மாநிலத்தின் நகரப் பகுதிகள் மட்டுமின்றி, கிராமப் பகுதிகளிலும் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஆறுகள் வற்றியுள்ளதால், கரையோர விவசாயிகளும் விளைச்சல் செய்ய தண்ணீரின்றி அவதிப்படுகின்றனர்.
..................
படம்: தினமலர் கொரோனா லோகோ
பரவும் உருமாறிய கொரோனாமுகக் கவசம் அணிந்தால் நல்லது
கொரோனா தொற்று, 2020, 2021ல் உலகை எப்படி எல்லாம் ஆட்டி படைத்தது என்ற சோகத்தில் இருந்து, நம்மில் பலர் இன்னும் மீளவில்லை. பலர் தங்கள் உற்றார், உறவினர்கள், நண்பர்களை இழந்தனர்.
தந்தை, தாயை இழந்த பிள்ளைகள்; ஈன்றெடுத்த மகன், மகளை இழந்த பெற்றோர் என இப்போது அந்த நாட்களை நினைத்தால், நினைவலைகள் நம் கண் முன் ஓடுகிறது. தடுப்பூசி செலுத்தி கொண்டதால், 2022ல் ஓரளவு அமைதியாக கொரோனா, 2023 இறுதியில் மீண்டும் பரவ ஆரம்பித்துள்ளது.
ஜே,என்.1.1 என்ற உருமாறிய கொரோனா, கர்நாடகா உட்பட நாட்டின் பல பகுதிகளிலும், உலகின் பல பகுதிகளிலும் பரவ ஆரம்பித்துள்ளது. தற்போதைய ஆய்வுகளின் படி, இதன் வீரியம் குறைவு என்று கூறினாலும், முதியோர், வெவ்வேறு நோய்களால் அவதிப்படுவோர் எச்சரிக்கையாக இருத்தல் அவசியம் என்று மருத்துவ வல்லுனர்கள் கூறுகின்றனர்.
இதனால் தான், அவர்களுக்கு முகக் கவசம் அணிவது கட்டாயம் ஆக்கி அரசு உத்தரவிட்டது. கொரோனா தொற்று பரவினால், ஏழு நாட்கள் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கும்படி, அரசு, தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
உருமாறிய கொரோனாவால், முதல், இரண்டாம் அலைகள் போன்று, மீண்டும் பாதிப்பு ஏற்பட கூடாது என்று மக்கள் அச்சத்தில் உள்ளனர். அச்சத்தை தவிர்த்து, முகக் கவசம் அணிந்து கொண்டு, கைகளை அவ்வப்போது சுத்தம் செய்வது நல்லது என்று அரசு சொல்கிறது.
ஆங்கில புத்தாண்டு, பொங்கல் பண்டிகை வருவதால், கூட்ட நெரிசல் மிகுந்த பகுதிகளில் எச்சரிக்கை அவசியம் என்பதை மறக்க கூடாது.
................
பெண்ணை நிர்வாணமாக்கிய கொடூரம்
மனித குலமே தலைகுனிய செய்த சம்பவம்
பரபரப்புக்கு பஞ்சமில்லாத பெலகாவியின், வெண்டமுரி கிராமத்தின் ஒரே சமுதாயத்தை சேர்ந்த, இளைஞர், இளம்பெண் காதலித்து, ஒரு மாதத்துக்கு முன் திருமணம் செய்து கொண்டனர். இதற்கு, இளம்பெண்ணின் உறவினர்கள், இளைஞரின் தாயை நிர்வாணமாக்கி கொடூரமாக தாக்கினர்.
சாலையில் ஊர்வலமாக இழுத்து வந்து, கம்பத்தில் கட்டி வைத்து தாக்கி, அரக்கன் போல் செயல்பட்டனர். வட மாநிலங்களில் நடந்து வந்த இச்சம்பவங்கள், தென் மாநிலங்களில் நடந்தது இதுவே முதல் சம்பவம்.
ஆளுங்கட்சி, எதிர்க்கட்சியினர் மாறி, மாறி ஒருவர் மீது மற்றொருவர் குற்றஞ்சாட்டி கொண்டனர். ஆனால், பாதிக்கப்பட்டவருக்கு நீதி கிடைக்க செய்யவில்லை. இந்த சம்பவத்துக்கு ஒட்டு மொத்த மனித குலமே தலை குனிய வேண்டும்.
பெலகாவியில் குளிர்கால சட்டசபை கூட்டத்தொடர் நடந்து கொண்டிருந்த வேளையில், இந்த கொடூர சம்பவம் நடந்தது. இரண்டு வாரங்களாக பெலகாவியில் இருந்த முதல்வர், பாதிக்கப்பட்ட பெண்ணை சந்தித்து ஆறுதல் கூறவில்லை. நீதி கிடைக்க செய்வோம் என்று தைரியம் எற்படுத்தவில்லை.
ஆனால், 5,00,000 ரூபாய் ரொக்கம், இரண்டு ஏக்கர் நிலத்தை வழங்கியதுடன் அரசு, அமைதியாகி விட்டது. மனிதனை, மனிதனாக மதிக்கும் வரையிலும், கடுமையான சட்டங்கள் இருந்தால் மட்டுமே, இத்தகைய சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்று பல பெண்கள் கருதுகின்றனர்.
.......................
படம்: 31_Actress Leelavathi
படம்: 31_Dhruvanarayan Cong
இன்னுலகை துறந்த பிரபலங்கள்
இறப்பு என்பது அனைவருக்குமானது. ஆனால், அந்த இறப்பு ஒரு குடும்பத்தை மட்டுமின்றி, சில நேரத்தில் சமுதாயத்திலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி விடுகிறது.
இப்படி அரசியல், சினிமா, ஆன்மிக பிரபலங்கள் என கர்நாடகாவில் பல பிரமுகர்கள் காலமானதை பார்ப்போம்.
* ஜனவரி 2: விஜயநகரா மாவட்டம், ஞான யோகா ஆசிரமத்தின் சித்தேஸ்வரா சுவாமிகள்
* பிப்ரவரி 20: கன்னட திரைப்பட இயக்குனர் பகவான்
* மார்ச் 11: காங்கிரஸ் மாநில செயல் தலைவர் துருவநாராயணா
* ஜூலை 18: கேரளா முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி
* ஆகஸ்ட் 7: நடிகர் விஜய் ராகவேந்திராவின் மனைவி ஸ்பந்தனா
* டிசம்பர் 8: பிரபல திரைப்பட நடிகை லீலாவதி
* டிசம்பர் 26: கன்னட திரைப்பட இயக்குனர் ஜாலி பாஸ்டின்
........................
படம்: 31_Shivarajkumar
கன்னட சினிமாவில் ஏற்றம், இறக்கம்
'சான்டல்வுட்' என்று பிரபலமான கன்னட திரையுலகம், 2022ல் ஏற்றத்தை கண்டது. 2023ல், 225 திரைப்படங்கள் திரைக்கு வந்தன. சிவராஜ்குமார், தர்ஷன், கணேஷ், டார்லிங் கிருஷ்ணா, பிரஜ்வல் தேவராஜ், ரக் ஷித் ஷெட்டி உட்பட பலரது திரைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
பல புதுமுக நடிகர்களின் திரைப்படங்கள் எதிர்பார்த்த அளவு வெற்றி காணவில்லை. ஒட்டு மொத்தமாக கன்னட திரையுலகம், 300 கோடி ரூபாய்க்கும் அதிகமாக முதலீடு செய்தும், சொல்லும் அளவுக்கு லாபம் கிடைக்கவில்லை.
.............
படம்: 31_Arjuna Elephant
உலுக்கிய சம்பவங்கள்
* வீட்டில் பதுங்கிய பயங்கரவாதிகள்பெங்களூரு சுல்தான்பாளையாவின் ஒரு வீட்டில், ஜூலை 18ல் சி.சி.பி., போலீசார் சோதனை நடத்தினர். அப்போது, பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருந்த ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். 7 துப்பாக்கிகள், 4 கையெறி குண்டு, 45 குண்டுகள், 4 வாக்கி டாக்கி உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பெங்களூரின் முக்கிய பகுதிகளை தகர்க்க சதி திட்டம் தீட்டியது கண்டுபிடிக்கப்பட்டது.
* அத்திப்பள்ளி பாலாஜி பட்டாசு குடோனில், அக்டோபர் 7ம் தேதி, மின்கசிவு ஏற்பட்டு தீ விபத்து நடந்தது. இதில், கல்வி கட்டணம் செலுத்துவதற்காக, பணம் சம்பாதிக்க வேலைக்காக வந்த சிறார்கள் உட்பட 17 பேர் பரிதாபமாக இறந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர். முறைகேடாக பட்டாசுகளை பதுக்கி வைத்தது கண்டுபிடிக்கப்பட்டது.
* பெண் சிசுக்கள் கருக்கலைப்பு
கர்நாடகாவின் பல தனியார் மருத்துவ பரிசோதனை மையங்களில், பெண் சிசு கருக்கலைப்பு செய்யும் விஷயம் சமீபத்தில் வெளிச்சத்துக்கு வந்தது. பிள்ளைகள் இல்லாமல் பலரும் கஷ்டப்படும் நேரத்தில், சிலர் பெண் சிசுவை கருக்கலைப்பு செய்யும்படி கூறுவது தாய் உள்ளங்களுக்கு தீங்கானது. தடை செய்திருந்தும் மருத்துவ பரிசோதனை மையங்கள், கருக்கலைப்பு செய்வது கொடூர செயல் என பலரும் கருதுகின்றனர்.
* ஒரே குடும்பத்தின் நால்வர் கொலை
உடுப்பி மாவட்டம், நேஜர் பகுதியை சேர்ந்த ஹசீனா, 46, இவரது பிள்ளைகள் அப்னான், 23, அஜ்னாஜ், 21, அசீம், 12, ஆகிய நான்கு பேரை, பிரவீண் சவுகுலே என்ற விமான ஊழியர் நவம்பர் 12ம் தேதி, வீட்டுக்குள் புகுந்து கொலை செய்தார்.
* அர்ஜுனா யானை இறப்பு
மைசூரு தசரா என்றால் அர்ஜுனா யானை கம்பீரம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. எட்டு முறை தங்க அம்பாரியை சுமந்து பிரசித்தி பெற்றது. 22 ஆண்டுகள் தசரா விழாவில் பங்கேற்றது. ஹாசன் மாவட்டம், சக்லேஸ்புரத்தில் காட்டு யானையை பிடிக்க, கும்கி யானையாக செயல்பட்ட போது, டிசம்பர் 4ம் தேதி இறந்தது. அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
- நமது நிருபர் -.