மேகதாது அணை திட்டத்தை செயல்படுத்த 30 பேர் குழு: கர்நாடக அரசு அதிரடி
மேகதாது அணை திட்டத்தை செயல்படுத்த 30 பேர் குழு: கர்நாடக அரசு அதிரடி
ADDED : டிச 13, 2025 01:11 AM

பெங்களூரு: காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை கட்டும் பணிக்காக, 30 பேர் அடங்கிய குழுவை கர்நாடக காங்., அரசு நியமித்துள்ளது.
பெங்களூரு மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களின் குடிநீர் தேவைக்காக, பெங்களூரு தெற்கின் கனகபுரா அருகே, மேகதாது என்ற இடத்தில், காவிரியின் குறுக்கே புதிய அணை கட்ட, 2013 - 18ல் நடந்த காங்கிரஸ் ஆட்சியில் முடிவு செய்யப்பட்டது.
மேகதாது அணை திட்டத்திற்கு, தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதை எதிர்த்து, தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை, உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் 13ம் தேதி தள்ளுபடி செய்தது. அதே நேரம், 'அணை கட்டும் விவகாரத்தில், காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம், காவிரி நதிநீர் ஒழுங்காற்று ஆணைய பரிந்துரைகள், கருத்துகளின் அடிப்படையில், மத்திய நீர்வள ஆணையம் முடிவு எடுக்க வேண்டும்' என்றும், உச்ச நீதிமன்றம் கூறி இருந்தது.
இந்நிலையில், மேகதாது அணை திட்டத்தை செயல்படுத்துவதற்காக, நீர்பாசனத்துறைக்கு உட்பட்ட கர்நாடக பொறியியல் ஆராய்ச்சி மைய இயக்குநர் கே.ஜி.மகேஷ் தலைமையில் குழு அமைத்து, அம்மாநில அரசு நேற்று உத்தரவிட்டது.
உத்தரவில் கூறியிருப்பதாவது:
கடந்த நவம்பர் 18ம் தேதி, துணை முதல்வர் சிவகுமார் தலைமையில் நடந்த மேகதாது அணை திட்டம் தொடர்பான ஆலோசனை கூட்டத்தில், திட்டத்தை விரைவாக செயல்படுத்த தலைமை இன்ஜினியர் அலுவலகம், கண்காணிப்பாளர், இன்ஜினியர் அலுவலகங்கள் துவங்க முடிவு செய்யப்பட்டது.
புதிய அலுவலகம் அமைக்கவும், பணியிடங்களை நிரப்பவும் நிதித் துறை ஒப்புதல் தேவை. இதற்கு அதிக நேரம் எடுக்கும் என்பதால், இந்த திட்டத்தை செயல்படுத்தும் பொறுப்பு, கர்நாடக பொறியியல் ஆராய்ச்சி மைய இயக்குநரிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. திட்ட அலுவலகம், ராம்நகரில் துவங்கப்படும். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தின் கடும் எதிர்ப்பையும் மீறி, மேகதாது அணை கட்டுவதற்கான நடவடிக்கைகளில் கர்நாடக அரசு இறங்கியிருப்பது, தமிழக விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

