கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: 'விசாரணை பட்டியலிடப்பட்டதில் விதிமீறல் இல்லை'
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: 'விசாரணை பட்டியலிடப்பட்டதில் விதிமீறல் இல்லை'
ADDED : ஜன 03, 2026 01:44 AM

கரூரில், தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பங்கேற்ற கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி, 41 பேர் உயிரிழந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்ற முதன்மை அமர்வும், மதுரை கிளை அமர்வும் ஒரே நேரத்தில் விசாரணை நடத்தியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த வழக்கு தொடர்பான மேல்முறையீட்டு மனுக்களை கடந்த மாதம் விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி ஜே.கே.மகேஸ்வரி தலைமையிலான அமர்வு, 'கரூர் சம்பவம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் விசாரித்த முறையில் நிறைய குழப்பங்கள் உள்ளன.
'சென்னை உயர்நீதிமன்ற முதன்மை அமர்வு விசாரணை நடத்தியதில் ஏதோ தவறு இருப்பதாக தெரிகிறது. இது குறித்து உயர் நீதிமன்ற பதிவாளர் விளக்கம் அளிக்க வேண்டும்' என, உத்தரவிட்டனர்.
இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்ற பதிவாளர் சார்பில், 142 பக்கங்கள் அடங்கிய பிரமாண பத்திரம் உச்ச நீதிமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.
அதன் விபரம்:
நீதிமன்றத்தின் வழக்கமான நடைமுறைகள் படி, ஒரு வழக்கு பதிவானால் அதை பட்டியலிடுவதற்கு முன்பாக சரி பார்க்கும் வேலைகள் செய்யப்படும்.
அனைத்தும் சரியாக இருந்தால், வழக்கிற்கான எண்கள் கொடுக்கப்பட்டு, எந்த அமர்விடம் வழக்கு பட்டியலிட வேண்டும் என்பதற்காக, சம்பந்தப்பட்ட குமாஸ்தாக்களிடம் அந்த விபரங்கள் அனுப்பி வைக்கப்படும்.
ஒருவேளை வழக்கு தாக்கல் செய்யப்பட்ட முறையில் ஏதேனும் பிழை இருந்தால், வழக்கு மனுதாரர்களுக்கே மீண்டும் அனுப்பி வைக்கப்படும்.
பிறகு அவர்கள் தவறை சரி செய்து மறுத்தாக்கல் செய்தால், மீண்டும் வழக்கு எண் கொடுக்கப்பட்டு பிறகு விசாரணைக்காக பட்டியலிடப்படும், தமிழக வெற்றிக்கழக வழக்கை பொறுத்தவரை, அது பொதுநல வழக்காக அல்லாமல், கிரிமினல் ரிட் மனுவாக இருப்பதால் தனி நீதிபதி அமர்வு முன் பட்டியலிடப்பட்டு விசாரிக்கப்பட்டது.
எதிர் மனுதாரர்களாக காவல்துறையை சேர்ந்தவர்கள் இருந்ததனால், இதை பொதுநல வழக்காக கருதவில்லை. மேலும் இதை பொதுநல வழக்காக மாற்ற எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படாததால் கிரிமினல் வழக்காகவே கருதி விசாரணைக்காக பட்டியலிட்டப்பட்டது. இதில், எந்த விதிமீறலும் இல்லை. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
-- டில்லி சிறப்பு நிருபர் -

