காஷ்மீரி பண்டிட்களுக்கு சொந்தமான சாரதா கோவில் 35 ஆண்டுக்கு பின் திறப்பு
காஷ்மீரி பண்டிட்களுக்கு சொந்தமான சாரதா கோவில் 35 ஆண்டுக்கு பின் திறப்பு
ADDED : ஆக 31, 2025 11:58 PM

ஸ்ரீநகர்: காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள காஷ்மீரி பண்டிட்களுக்கு சொந்தமான சாரதா பவானி கோவில், 35 ஆண்டுகளுக்கு பின் நேற்று மீண்டும் திறக்கப்பட்டது.
ஜம்மு - காஷ்மீரின் காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில், காஷ்மீரி பண்டிட் எனப்படும் ஹிந்து பிராமணர்கள் வசித்து வந்தனர். இவர்கள் கடந்த 1990ல் ஏற்பட்ட பயங்கரவாத தாக்குதல் காரணமாக அங்கிருந்து வெளியேறி, வெவ்வேறு இடங்களில் வசிக்கின்றனர்.
இந்நிலையில், ஜம்மு - காஷ்மீரின் பட்காம் மாவட்டத்தில் உள்ள தங்கள் மூதாதையர் வசித்த இச்கூட் கிராமத்திற்கு, குறிப்பிட்ட சில காஷ்மீரி பண்டிட் குடும்பத்தினர் திரும்பியுள்ளனர். அவர்கள் இங்குள்ள சாரதா பவானி கோவிலை மீண்டும் திறந்தனர்.
இங்கு வசிக்கும் முஸ்லிம்கள் ஆதரவுடன் இந்த கோவில், 35 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் திறக்கப்பட்டது.
இதையொட்டி, நல்ல நேரத்தில் சிறப்பு பூஜைகள் நடத்தி கோவிலில் சுவாமி சிலை நிறுவப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அப்பகுதியில் வசிக்கும் ஏராளமான முஸ்லிம்களும் பங்கேற்றனர்.
இது குறித்து, பட்காமில் உள்ள சாரதா அஸ்தப்னா சமூகத்தின் தலைவர் சுனில் குமார் பட் கூறியுள்ளதாவது:
தற்போது புதுப்பிக்கப் பட்ட இந்த கோவில், பாகிஸ்தானில் உள்ள சாரதா மாதா கோவிலின் கிளை. இந்த கோவிலை திறப்பதற்காக நீண்ட காலமாக காத்திருந்தோம்.
இங்கு வசிக்கும் முஸ்லிம்களும் இதை திறக்க விரும்பி அடிக்கடி எங்களிடம் வலியுறுத்தினர்.
இதையடுத்து, 35 ஆண்டுகளுக்கு பின் தற்போது கோவில் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. இதுபோல் ஒவ்வொரு ஆண்டும் இந்த கோவிலில் திருவிழா நடத்த விரும்புகிறோம்.
காஷ்மீருக்கு மாதா ராணி சமூகத்தினர் விரைவில் திரும்ப நாங்கள் பிரார்த்திக்கிறோம். இந்த இடத்தை சுத்தம் செய்த போது கிடைத்த சிவலிங்கத்தை மீட்டு கோவிலில் மீண்டும் நிறுவியுள்ளோம்.
பழைய கோவில் இடிந்ததால், புதிய கோவில் கட்ட மாவட்ட நிர்வாகத்தை அணுகினோம். இதற்கு உள்ளூர் முஸ்லிம்கள் உதவியதால் தான், எங்களால் இந்த கோவிலை புதுப்பிக்க முடிந்தது.
இவ்வாறு அவர் கூறினார்.